கட்டணமில்லா வருவாய் திட்டத்தின் கீழ், கன்னியாகுமரி ரயில் நிலையத்தில் நவீன வசதிகளுடன் கூடிய 'உணவு வீதி' (Food Street) மற்றும் புதிய அணுகு சாலை அமைக்க வேண்டும் என ரயில்வே நிர்வாகத்திற்குக் கன்னியாகுமரி மாவட்ட ரயில் பயணிகள் சங்கத்தின் சார்பாக கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாகத் திருவனந்தபுரம் ரயில்வே கோட்ட அதிகாரிகளுக்கு அனுப்பப்பட்டுள்ள கோரிக்கை மனுவில்: திருவனந்தபுரம் ரயில்வே கோட்டத்தின் சார்பில் ஆலப்புழா ரயில் நிலையத்தில் உணவு வீதி அமைப்பதற்கான ஒப்பந்தப்புள்ளிகள் கோரப்பட்டிருப்பது வரவேற்கத்தக்கது.
உலகப் புகழ்பெற்ற சர்வதேச சுற்றுலாத் தலமாகவும், ஆன்மீக மையமாகவும் விளங்கும் கன்னியாகுமரிக்கு தினமும் ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகளும், பக்தர்களும் ரயில் மூலம் வந்து செல்கின்றனர். எனவே, பயணிகளின் நலன் கருதியும், ரயில்வே துறைக்குக் கூடுதல் வருவாய் ஈட்டும் வகையிலும் கன்னியாகுமரி ரயில் நிலையத்திலும் கட்டணமில்லா வருவாய் திட்டத்தின் கீழ் உணவு வீதி அமைக்க வேண்டும்.
இத்திட்டத்தின் கீழ், பிரதான 4 வழிச்சாலையை ரயில் நிலைய நுழைவாயில் சாலையுடன் நேரடியாக இணைக்கும் புதிய அணுகு சாலை அமைக்கப்பட வேண்டும். இச்சாலையின் ஒருபுறம் திட்டமிடப்பட்ட உணவகக் கடைகள் கொண்ட உணவு வீதியும், மறுபுறம் இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடம், பயணிகள் காத்திருப்பு இருக்கைகள், சுத்தமான கழிப்பறைகள் உள்ளிட்ட அடிப்படை வசதிகளும் ஏற்படுத்தப்பட வேண்டும்.
இத்திட்டத்தைச் செயல்படுத்துவதன் மூலம் ரயில் நிலையப் பகுதியில் நிலவும் போக்குவரத்து நெரிசல் குறைவதுடன், ரயில்வே துறைக்குக் கணிசமான வருவாயும் கிடைக்கும். எனவே, ரயில்வே அதிகாரிகள் சம்பந்தப்பட்ட இடத்தை நேரில் ஆய்வு செய்து உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த மனுவில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

