கன்னியாகுமரியில் உள்ள விடுதியில் பெண்ணைப் படுகொலை செய்து நகை மற்றும் பணத்தைக் கொள்ளையடித்துத் தப்பிச் சென்ற ஈரோட்டைச் சேர்ந்த வாலிபரை, தனிப்படை போலீசார் மதுரையில் வைத்து 12 மணி நேரத்தில் அதிரடியாகக் கைது செய்தனர்.
கன்னியாகுமரி விவேகானந்தபுரத்தில் உள்ள ஒரு தனியார் விடுதியில், அத்திங்காட்டுவிளையைச் சேர்ந்த செல்வி (50) என்ற பெண்ணும், 31 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவரும் அறையெடுத்துத் தங்கியுள்ளனர். மாலையில் அந்த வாலிபர் மட்டும் பதற்றத்துடன் தனியாக வெளியே சென்றுள்ளார்.
இதனால் சந்தேகமடைந்த லாட்ஜ் ஊழியர்கள் அறையைத் திறந்து பார்த்தபோது, செல்வி சடலமாகக் கிடப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்து உடனடியாகக் காவல்துறையினருக்குத் தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த கன்னியாகுமரி டி.எஸ்.பி. பிரகாஷ், காவல் ஆய்வாளர் பரத்லிங்கம் மற்றும் காவல்துறையினர் உடலைக் கைப்பற்றி ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்குப் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
சோதனையில், தலையணையால் முகத்தை நெரித்துக் கொலை செய்யப்பட்டதும், செல்வியின் காதிலிருந்த கம்மல்கள் காணாமல் போனதும் தெரியவந்தது. மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் அன்சுல் நாகர் உத்தரவின் பேரில், டி.எஸ்.பி. பிரகாஷ் மேற்பார்வையில் ஆய்வாளர் பரத், உதவி ஆய்வாளர்கள் அனுஜன் மற்றும் பால்ராஜ் தலைமையில் 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டன.
விவேகானந்தபுரம் பகுதியில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்புக் கேமரா காட்சிகளை ஆய்வு செய்தபோது, கொலையாளி தப்பிச்செல்லும் காட்சிகள் பதிவாகியிருந்தது. விசாரணையில் அவர் நாகர்கோவிலில் இருந்து கோவை செல்லும் அரசுப் பேருந்தில் தப்பியது தெரியவந்தது. இதையடுத்து, எஸ்.ஐ. அனுஜன் தலைமையிலான தனிப்படை போலீசார் ஜீப்பில் பின்தொடர்ந்து சென்று, மதுரையைத் தாண்டிச் சென்ற பேருந்தை மறித்து வாலிபரை மடக்கிப் பிடித்தனர்.
கைது செய்யப்பட்ட நபரிடம் நடத்திய விசாரணையில், அவர் ஈரோடு மாவட்டம் வீரப்பன் சத்திரம் பகுதியைச் சேர்ந்த செல்வராஜ் (31) என்பதும், சென்னையில் டாக்சி ஓட்டுநராகப் பணியாற்றி வருவதும் தெரியவந்தது. நாகர்கோவில் வடசேரி பேருந்து நிலையத்தில் செல்வியுடன் அறிமுகமாகி, கன்னியாகுமரி லாட்ஜில் தங்கியுள்ளார்.
அப்போது ஏற்பட்ட பணத்தகராறில், செல்வராஜ் செல்வியைத் தாக்கி தலையணையால் முகத்தை நெரித்துக் கொலை செய்துவிட்டு, கம்மலைத் திருடிக்கொண்டு தப்பியது தெரியவந்தது. கொலை நடந்த 12 மணி நேரத்திற்குள் குற்றவாளியை விரைந்து கைது செய்த தனிப்படை போலீசாரைப் பொதுமக்கள் மற்றும் உயர் அதிகாரிகள் வெகுவாகப் பாராட்டினர்.

