திருநெல்வேலி மாவட்டம், கங்கைகொண்டான் சிப்காட் தொழிற்பேட்டையில் 50 ஏக்கர் பரப்பளவில் ரூ.77.024 கோடி திட்ட மதிப்பீட்டில் மெகா உணவுப் பூங்கா அமைக்கப்பட்டுள்ளது. சிப்காட் நிறுவனத்திடமிருந்து 50 ஏக்கர் நிலம் 99 ஆண்டுகள் குத்தகை அடிப்படையில் பெறப்பட்டு, வேளாண் மற்றும் உணவு பதப்படுத்தும் தொழில் நிறுவனங்கள் ஒரே இடத்தில் தொழில் தொடங்குவதற்கு தேவையான நவீன பொது உட்கட்டமைப்பு வசதிகள் உருவாக்கப்பட்டுள்ளன.
இத்திட்டத்தின் மூலம் வேளாண் மற்றும் தோட்டக்கலை விளைபொருட்களின் அறுவடைக்குப் பிந்தைய இழப்புகளைக் குறைத்தல், மதிப்புக் கூட்டுதல், விவசாயிகளுக்கு நேரடி சந்தை இணைப்பை ஏற்படுத்துதல், விளைபொருட்களுக்கு சிறந்த விலை கிடைக்கச் செய்தல், நவீன உணவு பதப்படுத்தும் தொழிற்சாலைகளை உருவாக்குதல், ஏற்றுமதியை ஊக்குவித்தல் மற்றும் கிராமப்புற இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புகளை உருவாக்குதல் ஆகியவை முக்கிய நோக்கங்களாகும்.
நவீன பொது உட்கட்டமைப்பு வசதிகள்
மெகா உணவுப் பூங்காவில் சுமார் 22 ஏக்கர் பரப்பளவில் அடிப்படை மற்றும் மைய உட்கட்டமைப்பு வசதிகள் உருவாக்கப்பட்டுள்ளன. அவற்றில், உள்சாலைகள் மற்றும் வாகன நிறுத்துமிடம், சுற்றுச்சுவர் மற்றும் பிரதான நுழைவுவாயில், மின்சார வசதிகள், 2 லட்சம் லிட்டர் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி மற்றும் 7 லட்சம் லிட்டர் தரைமட்ட நீர்த்தேக்கத் தொட்டி 250 KLD கழிவுநீர் சுத்திகரிப்பு வசதி, தலா 60 மெட்ரிக் டன் திறன் கொண்ட 2 எடைமேடைகள், நாளொன்றுக்கு 20 மெட்ரிக் டன் திறன் கொண்ட காய்கறி பேக் ஹவுஸ், 7,500 மெட்ரிக் டன் கொள்ளளவு கொண்ட கிடங்கு ,5,000 மெட்ரிக் டன் கொள்ளளவு கொண்ட குளிர்பதனக் கிடங்கு, விவசாயிகள் வளாகம், மற்றும் வணிகர் கடைகள் உள்ளிட்ட வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
புதிய தொழில் முதலீடுகளை ஈர்க்க தொடர் நடவடிக்கைகள்
கங்கைகொண்டான் மெகா உணவுப் பூங்காவில் தொழில் முதலீடுகளை அதிகரிப்பதற்காக மாவட்ட அளவில் தொடர் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. Startups மற்றும் புதிய தொழில்முனைவோர்களுக்கான விழிப்புணர்வு இணையவழிக் கூட்டங்கள், திருநெல்வேலி மாவட்ட வர்த்தக மற்றும் தொழில்துறை சங்கமான (TDCCI ) உறுப்பினர்களுக்கான முதலீட்டு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் மற்றும் உணவுப் பூங்கா பார்வையிடல் ஆகியவை நடத்தப்பட்டுள்ளன.
மேலும், புதிய முதலீட்டாளர்களுக்கு விரிவான திட்ட அறிக்கை (DPR) தயாரித்தல், தொழிற்சாலைக்கான நிலம் தேர்வு, பொதுக் கட்டமைப்பு வசதிகளைப் பயன்படுத்துதல், தொழில் தொடங்குவதற்கான விண்ணப்ப நடைமுறைகள் மற்றும் திட்ட செயலாக்கம் தொடர்பாக தேவையான ஒருங்கிணைப்பு மற்றும் வழிகாட்டுதல்கள் வழங்கப்பட்டு வருகின்றன.
தற்போது பல்வேறு உணவு பதப்படுத்துதல் மற்றும் மதிப்புக் கூட்டுதல் சார்ந்த தொழில் முன்மொழிவுகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
குறிப்பாக தேங்காய் சார்ந்த மதிப்புக் கூட்டுப் பொருட்கள், மக்காச்சோளம் மதிப்புக் கூட்டுதல் மற்றும் பதப்படுத்துதல், உலர் காளான் பதப்படுத்துதல் மற்றும் ஏற்றுமதி போன்ற தொழில் வாய்ப்புகள் தொடர்பாக முதலீட்டாளர்களுடன் ஆலோசனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
28 ஏக்கர் தொழில் அமைப்பதற்கான பகுதி
மெகா உணவுப் பூங்காவில் சுமார் 28 ஏக்கர் பரப்பளவு தொழில் நிறுவனங்கள் அமைப்பதற்கான பகுதியாக உள்ளது. இப்பகுதியில் வேளாண் மற்றும் தோட்டக்கலை சார்ந்த உணவு பதப்படுத்துதல், மதிப்புக் கூட்டுதல், சேமிப்பு, பேக்கிங் மற்றும் ஏற்றுமதி சார்ந்த தொழில் நிறுவனங்களை அமைப்பதற்கான வாய்ப்புகள் உள்ளன.
குறிப்பாக வாழை, தேங்காய், முருங்கை, காய்கறிகள், பழங்கள், சிறுதானியங்கள், பருப்பு வகைகள், மக்காச்சோளம், முந்திரி, காளான், ஊறுகாய் மற்றும் இதர வேளாண் விளைபொருட்களை அடிப்படையாகக் கொண்ட மதிப்புக் கூட்டுதல் மற்றும் உணவு பதப்படுத்தும் தொழில்களை இப்பூங்காவில் நிறுவ முதலீட்டாளர்கள் முன்வரலாம்.
முதலீட்டாளர்களுக்கு மாவட்ட ஆட்சித் தலைவர் அழைப்பு
திருநெல்வேலி மாவட்டத்தில் உற்பத்தியாகும் வேளாண் மற்றும் தோட்டக்கலை விளைபொருட்களை மதிப்புக் கூட்டப்பட்ட பொருட்களாக மாற்றுவதன் மூலம் விவசாயிகளுக்கு கூடுதல் வருமானம் கிடைப்பதுடன், புதிய தொழில் வாய்ப்புகள், ஏற்றுமதி வாய்ப்புகள் மற்றும் உள்ளூர் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புகளையும் உருவாக்க முடியும்.
எனவே, உணவு பதப்படுத்தும் நிறுவனங்கள், வேளாண் தொழில்முனைவோர், குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் (MSMEs), புத்தாக்க நிறுவனங்கள்(Startup ), உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்கள் (FPO/FPC) மற்றும் புதிய முதலீட்டாளர்கள் கங்கைகொண்டான் மெகா உணவுப் பூங்காவில் உள்ள நவீன உட்கட்டமைப்பு வசதிகளைப் பயன்படுத்தி புதிய தொழில் நிறுவனங்களை நிறுவ முன்வர வேண்டும் என திருநெல்வேலி மாவட்ட ஆட்சித் தலைவர் தெரிவித்துள்ளார்.
மேலும், ஆர்வமுள்ள முதலீட்டாளர்களுக்கு தொழில் தொடங்குவதற்கான வழிகாட்டுதல், இடம் தேர்வு, திட்ட முன்மொழிவு மற்றும் தொடர்புடைய துறைகளுடன் ஒருங்கிணைப்பு உள்ளிட்ட தேவையான உதவிகள் மாவட்ட நிர்வாகம் மற்றும் வேளாண்மை விற்பனை மற்றும் வேளாண் வணிகத் துறையின் மூலம் வழங்கப்படும் என மாவட்ட ஆட்சித் தலைவர் ஆனந்த் மோகன் தெரிவித்துள்ளார்.

