கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் பத்மஜாவுக்கு ஆபாசக் குறுஞ்செய்தி அனுப்பியதாகவும், இல்லத்துக்குள் அத்துமீறி நுழைந்து தகாத முறையில் நடந்து கொண்டதாகவும் எழுந்த குற்றச்சாட்டைத் தொடர்ந்து, கள்ளக்குறிச்சி த.வெ.க. எம்.எல்.ஏ. அருள் விக்னேஷுக்குக் காவல் ஆய்வாளர் புவனேஸ்வரி இன்று (நவம்பர் 25) காலை நேரில் சம்மன் வழங்கினார்.

கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியருக்கு ஆபாசக் குறுஞ்செய்தி அனுப்பியதாக எழுந்த புகார் தொடர்பாக, கள்ளக்குறிச்சி த.வெ.க. சட்டமன்ற உறுப்பினர் அருள் விக்னேஷிடம் போலீசார் இன்று (புதன்கிழமை, நவம்பர் 25) காலை நேரில் சம்மன் வழங்கினர். மேலும், அவரது அலுவலகம் முன்பு போலீசார் குவிக்கப்பட்டுள்ளதால் அப்பகுதியில் பரபரப்பான சூழல் நிலவுகிறது.

கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் பத்மஜாவுக்கு ஆபாசக் குறுஞ்செய்தி அனுப்பி, ஆட்சியரின் இல்லத்துக்குள் அத்துமீறிச் சென்று தகாத முறையில் நடந்து கொண்டதாகக் கள்ளக்குறிச்சி த.வெ.க. எம்.எல்.ஏ. அருள் விக்னேஷ் மீது குற்றச்சாட்டு எழுந்தது. இது குறித்து வழக்குப் பதிவு செய்து நடவடிக்கை எடுக்கக் கோரி அ.தி.மு.க. வழக்கறிஞர் ஆர். திரிசூலி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்திருந்தார்.

ஆபாசக் குறுஞ்செய்தி தொடர்பாக தேசிய மகளிர் ஆணையமும் அறிக்கை கோரியுள்ளதாகவும், சம்பந்தப்பட்ட பெண் ஆட்சியரின் கண்ணியம் மற்றும் மரியாதையைக் கேள்விக்குள்ளாக்கும் வகையில் சமூக வலைதளங்களில் பதிவிடுவோர் மீதும் விசாரணை நடத்தி டிஜிட்டல் ஆதாரங்களைப் பத்திரப்படுத்த போலீசாருக்கு உத்தரவிட வேண்டும் எனவும் மனுவில் கோரப்பட்டிருந்தது.

இவ்வழக்கு நீதிபதி வி. லட்சுமி நாராயணன் முன்னிலையில் நேற்று (நவம்பர் 24) விசாரணைக்கு வந்தபோது, "இந்த விவகாரத்தை யாரும் தேவையில்லாமல் அரசியலாக்கக் கூடாது. குற்றம் சாட்டப்பட்டவருக்கு எதிராகப் போலீசார் விரைவாக விசாரணை நடத்தி டிசம்பர் 22-ஆம் தேதிக்குள் இறுதி அறிக்கையைச் சம்பந்தப்பட்ட நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும்" என நீதிபதி உத்தரவிட்டார். இதையடுத்து இவ்வழக்கின் புலன் விசாரணை அதிகாரியாகத் திருப்பூர் எஸ்.பி. சிருஷ்டி சிங்கும், விசாரணையைக் கண்காணிக்கும் அதிகாரியாக நிர்வாக ஐ.ஜி. காமினியும் நியமிக்கப்பட்டனர்.

இந்நிலையில், கள்ளக்குறிச்சி த.வெ.க. எம்.எல்.ஏ. அருள் விக்னேஷ் அலுவலகம் முன்பு இன்று (நவம்பர் 25) காலை முதல் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். முன்னதாக, கையில் கோப்புகளுடன் வந்த காவல் ஆய்வாளர் புவனேஸ்வரி, சட்டமன்ற உறுப்பினர் அருள் விக்னேஷுக்குச் சம்மன் வழங்கினார். அப்போது எம்.எல்.ஏ.விடமும், அவரது குடும்பத்தினரிடமும் விசாரணை நடத்திய அவர், மேலதிக விசாரணைக்கு ஆஜராகும்படி அருள் விக்னேஷிடம் வலியுறுத்தியதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

அருள் விக்னேஷ் கைது செய்யப்பட வாய்ப்புள்ளதாகத் தகவல் வெளியான நிலையில் அவரது அலுவலகம் முன்பு போலீசார் குவிக்கப்பட்டுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இதற்கிடையில், அரசியல் அழுத்தங்கள் காரணமாக அவர் தனது எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்ய முடிவெடுத்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.