திருச்சூர் மாவட்டம் கைப்பமங்கலம் அடுத்துள்ள பனம்பிக்குன்னு பகுதியில் தேசிய நெடுஞ்சாலைப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதனால் அப்பகுதியில் சாலையோரம் லாரி ஒன்று நிறுத்தப்பட்டிருந்தது.

குருவாயூரிலிருந்து கொடுங்கல்லூர் நோக்கித் தமிழகப் பதிவு எண் கொண்ட காரில் சென்ற மாணவர்கள், எதிர்பாராதவிதமாகக் கட்டுப்பாட்டை இழந்து லாரியின் பின்புறத்தில் பலமாக மோதினர். இந்த விபத்தில் கார் முற்றிலும் நொறுங்கி, அதற்குள் இருந்தவர்கள் சிக்கிக்கொண்டனர்.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினரும் மீட்புக் குழுவினரும் காரில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். இருப்பினும், காரில் இருந்த 8 பேரும் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். உயிரிழந்தவர்களின் உடல்கள் மீட்கப்பட்டு பிரேதப் பரிசோதனைக்காகத் திருச்சூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டன.

விசாரணையில், உயிரிழந்த அனைவரும் திண்டுக்கல்லில் உள்ள பி.எஸ்.என்.ஏ. பொறியியல் கல்லூரியைச் சேர்ந்த மாணவர்கள் என்பது தெரியவந்தது. அதில், திண்டுக்கல் பகுதியைச் சேர்ந்த யுவ சஞ்சித், சூர்யா, மதுரையைச் சேர்ந்த பிரசன்னா, சேலத்தைச் சேர்ந்த விஷ்வா, சந்தோஷ், ஜோஸ்வா என்பது தெரியவந்தது. மேலும் 2 மாணவர்களின் விவரங்களை அடையாளம் காணும் பணியில் காவல்துறையினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். விபத்துக்கான காரணம் குறித்து வழக்குப் பதிவு செய்யப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.