திமுக முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு மற்றும் அவரது சகோதரர் ரவிச்சந்திரனுக்கு தொடர்புடைய 19 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் சோதனை நடத்தினர். திமுக முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு. இவரது சகோதரர் ரவிச்சந்திரனுக்கு தொடர்புடைய இடங்களில் இன்று காலை முதல் திடீரென லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் சோதனை நடத்தினர். சென்னை, திருச்சி, அடையாறு, திருவான்மியூர் என 19 இடங்களிலும் சோதனை நடந்தது.
சென்னையில் ரவிச்சந்திரன் அலுவலகத்திலும் போலீசார் சோதனையில் ஈடுபட்டனர். திருச்சி தில்லை நகரில் உள்ள தி.மு.க. முன்னாள் அமைச்சர் நேரு வீட்டில் லஞ்ச ஒழிப்பு துறை போலீசார் சோதனை நடத்தினர். அரசு டெண்டர்களில் கட்சி நிதி என்ற பெயரில் சட்டவிரோதமாக நடந்த வசூல் தொடர்பாக சோதனை நடத்தியதாக லஞ்ச ஒழிப்புத்துறை வட்டாரங்களில் தகவல் வெளியாகி உள்ளது.
மு.க. ஸ்டாலின் கண்டனம்!
இது குறித்து திமுக தலைவர் ஸ்டாலின் வெளியிட்ட பதிவில், ''உயர் நீதிமன்றத்தில் வழக்கு நடந்து கொண்டிருக்கிறது; சட்டசபை கூட்டத்தொடரும் நடந்துகொண்டிருக்கிறது. இந்நிலையில், முழுக்க முழுக்க அரசியல் காரணங்களுக்காகவே, முன்னாள் அமைச்சர் நேரு மீதான சோதனை நடவடிக்கையைத் தவெக அரசு மேற்கொண்டுள்ளது. ஆட்சி அமைக்க மற்ற கட்சிகளின் சட்டசபை எம்எல்ஏக்களை ராஜினாமா செய்ய வைத்து, சட்டசபை வளாகத்திலேயே அவர்களைத் தம் கட்சியில் சேர்த்ததையும் குதிரை பேரம் நடத்தியதையும், அது தொடர்பான புகார்களில் லஞ்ச ஒழிப்புத்துறை முதல் தகவல் அறிக்கையைக் கூட பதியாததையும் தமிழக மக்கள் நன்கறிவர்.
இந்திய ஐனநாயகத்தின் இருண்ட பக்கமாய் இந்தப் போக்கு தொடரும் நிலையில் வழக்கம்போல் திசைதிருப்பும் நடவடிக்கையைக் கையில் எடுத்துள்ளது இந்த ரீல்ஸ் அரசு. நேருவும், திமுகவும் புதிய அரசின் இத்தகைய பூச்சாண்டிகளுக்கெல்லாம் அஞ்சிட மாட்டோம். சட்டத்தின் வழியில் அனைத்தையும் எதிர்கொண்டு வெல்வோம்'' என குறிப்பிட்டுள்ளார்.

