49 வயதான ஜார்ஜியா மெலோனி, கடந்த 2022 அக்டோபர் 22 அன்று இத்தாலியின் பிரதமராகப் பொறுப்பேற்றார். இவர் இத்தாலியின் முதல் பெண் பிரதமரும் ஆவார். வியாழக்கிழமையுடன் அவர் பதவியேற்று 1,413 நாட்கள் நிறைவடைந்த நிலையில், இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு இத்தாலியில் இடையூறின்றித் தொடர்ந்து நீண்ட காலம் பதவி வகித்த பிரதமர் என்ற புதிய சாதனையை அவர் படைத்துள்ளார்.
இச்சாதனையையொட்டி எக்ஸ் (X) தளத்தில் பிரதமர் நரேந்திர மோடி வெளியிட்ட வாழ்த்துப் பதிவில் கூறியிருப்பதாவது: "இத்தாலியின் போருக்குப் பிந்தைய வரலாற்றில், மிக நீண்ட காலம் தொடர்ந்து பிரதமராகப் பணியாற்றும் பெருமையைப் பெற்ற எனது நண்பர் பிரதமர் மெலோனிக்கு வாழ்த்துகள். இந்த மைல்கல் சாதனை, அவரது தலைமையின் மீது இத்தாலிய மக்கள் கொண்டுள்ள நம்பிக்கையையும் உறுதியையும் பிரதிபலிக்கிறது.
இந்தியா - இத்தாலி இடையிலான சிறப்பு உத்திசார் கூட்டாண்மையை வலுப்படுத்துவதில் மெலோனியின் நட்பு முக்கியப் பங்காற்றியுள்ளது. நமது இரண்டு நாட்டு மக்களுக்கும் வளமான எதிர்காலத்தை உருவாக்க அவருடனான நெருக்கமான ஒத்துழைப்பைத் தொடர நான் ஆவலாக உள்ளேன். வரும் ஆண்டுகளிலும் அவர் தொடர்ந்து வெற்றிபெற எனது நல்வாழ்த்துகள்" எனக் குறிப்பிட்டுள்ளார்.

