இந்திய இசை வரலாற்றில் அழியாத முத்திரை பதித்தவர் எம்.எஸ். சுப்புலட்சுமி. மொழி, எல்லைகள் மற்றும் தலைமுறைகளைக் கடந்து இன்றும் வாழும் அவரது இசையானது பல தலைமுறை இசைக்கலைஞர்களுக்கும் பாடகர்களுக்கும் மிகப்பெரிய முன்மாதிரியாகத் திகழ்கிறது.
அவரது வாழ்க்கை வரலாற்றைத் திரைப்படமாக்கப் பல்வேறு திரையுலக நிறுவனங்கள் தீவிர முயற்சி மேற்கொண்டு வந்த நிலையில், எம்.எஸ். சுப்புலட்சுமியின் 110-வது பிறந்தநாளை முன்னிட்டு இப் பிரம்மாண்ட பயோபிக் திரைப்படம் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கௌதம் தின்னனுரி இயக்கத்தில் எம்.எஸ். சுப்புலட்சுமி கதாபாத்திரத்தில் நடிகை ரஷ்மிகா மந்தனா நடிக்கிறார். அனிருத் இசையமைக்கும் இத்திரைப்படத்தை அல்லு அரவிந்த் (கீதா ஆர்ட்ஸ்) தயாரிக்கிறார்.
முன்னதாக இக்கதாபாத்திரத்தில் நடிகை சாய் பல்லவி நடிக்கவுள்ளதாகத் தகவல்கள் வெளியாகி வந்த நிலையில், தற்போது ரஷ்மிகா மந்தனா நடிக்கவுள்ளது ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பையும் விவாதத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

சமீபத்தில் இத்திரைப்படத்தின் தலைப்பு மற்றும் முதல் தோற்றப் போஸ்டர் வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் நிலையில், கமல்ஹாசன் கிளாப் அடித்துத் தொடங்கி வைத்த படத் தொடக்க விழா புகைப்படங்களும் வெளியாகி வரவேற்பைப் பெற்று வருகின்றன.

