திருநெல்வேலி மாவட்டத்தில் எல் நினோ தாக்கத்தால் ஏற்படக்கூடிய வறட்சி மற்றும் தீவனப் பற்றாக்குறையைத் தவிர்க்கக் கால்நடை வளர்ப்போர் மற்றும் விவசாயிகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு மாவட்ட ஆட்சியர் ஆனந்த் மோகன் கேட்டுக் கொண்டுள்ளார்.
திருநெல்வேலி மாவட்டத்தில் எதிர்வரும் மாதங்களில் எல் நினோ தாக்கத்தின் காரணமாக வறண்ட வானிலை மற்றும் நீராதாரப் பற்றாக்குறை ஏற்பட வாய்ப்புள்ளதால், கால்நடைகளுக்கான தீவனத் தேவையை முன்கூட்டியே திட்டமிட்டுப் பாதுகாக்கும் வகையில் மாவட்ட நிர்வாகம் சார்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் ஆனந்த் மோகன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ள முக்கிய விவரங்கள்:
கால்நடைகளைப் பாதுகாக்க மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள்:
கால்நடைகளுக்கு எப்போதும் போதுமான அளவு சுத்தமான குடிநீர் கிடைக்கச் செய்ய வேண்டும்; குறிப்பாக வெப்பமான நேரங்களில் நீர் இல்லாமல் தவிப்பதைத் தவிர்க்க வேண்டும்.
கால்நடைகளை நேரடி வெயிலில் நீண்ட நேரம் கட்டி வைக்காமல், போதுமான நிழல் மற்றும் காற்றோட்டம் உள்ள இடங்களில் பராமரிக்க வேண்டும்.
அதிக வெப்பம் நிலவும் நண்பகல் நேரங்களில் கால்நடைகளை மேய்ச்சலுக்கு அழைத்துச் செல்வதைத் தவிர்த்து, காலை மற்றும் மாலை வேளைகளில் மட்டும் மேய்ச்சலுக்கு அனுமதிக்க வேண்டும்.
கால்நடைகளுக்குத் தேவையான பசுந்தீவனம், உலர் தீவனம் மற்றும் அடர் தீவனங்களை முன்கூட்டியே திட்டமிட்டு இருப்பில் வைத்துக் கொள்ள வேண்டும்; குறிப்பாக நெல் வைக்கோலை முறையாகச் சேகரித்துச் சேமிக்க வேண்டும்.
நெல் வைக்கோலைப் பாதுகாக்க விவசாயிகள் மேற்கொள்ள வேண்டியவை:
விவசாயிகள் நெல் அறுவடைக்குப் பின்னர் கிடைக்கும் வைக்கோலைக் கால்நடைத் தீவனத்திற்காகச் சேகரித்துப் பாதுகாப்பாகச் சேமிக்க வேண்டும்.
தீவனப் பற்றாக்குறைக் காலத்தில் பயன்படுத்துவதற்கு முன்னுரிமை அளிக்க வேண்டும்; வைக்கோலைப் பேக்கிங் உள்ளிட்ட பிற வணிகப் பயன்பாடுகளுக்குத் திசைதிருப்புவதை இயன்றவரை தவிர்க்க வேண்டும்.
நெல் வைக்கோலை எரித்தல், கைவிடுதல் மற்றும் வீணாக்குதல் போன்ற செயல்களைத் தவிர்க்க வேண்டும்.
விவசாய உற்பத்தியாளர் அமைப்புகள் (FPOs), மகளிர் சுய உதவிக் குழுக்கள் (SHGs), பால் உற்பத்தியாளர் கூட்டுறவுச் சங்கங்கள் மற்றும் சமூக அமைப்புகள் மூலம் உபரி வைக்கோலைச் சேகரித்துச் சேமிக்க ஊக்குவிக்கப்படுகிறார்கள்.
கால்நடை வளர்ப்போர், விவசாயிகள் மற்றும் தொடர்புடைய அமைப்புகள் மேற்கண்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைப் பின்பற்றி, கால்நடைகளின் நலனைப் பாதுகாக்கவும், தீவனப் பற்றாக்குறையைத் தவிர்க்கவும் முழு ஒத்துழைப்பு வழங்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

