சென்னை காமராஜர் துறைமுகத்தில் (எண்ணூர்) ரூ.4,288.26 கோடி மதிப்பீட்டில், ஆண்டுக்கு 2 மில்லியன் கண்டெய்னர்களைக் கையாளும் திறன் கொண்ட இரண்டாவது சரக்கு முனையம் அமைக்கப் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் இன்று (நவம்பர் 25) நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
இதனுடன், ‘மேக் இன் இந்தியா’ திட்டத்தின் கீழ் கட்டுமான இயந்திரங்களின் உள்நாட்டு உற்பத்தியை ஊக்குவித்தல், அசாம் டோலுவில் புதிய விமான நிலையம் அமைத்தல் மற்றும் தபால் துறையின் இரு திட்டங்களை 5 ஆண்டுகளுக்கு நீட்டித்தல் உள்ளிட்ட மொத்தம் 5 முக்கிய முடிவுகளுக்கு அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது.
மத்திய அமைச்சரவைக் கூட்டத்திற்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், இன்றைய கூட்டத்தில் எடுக்கப்பட்ட ஐந்து முக்கிய முடிவுகள் குறித்து விளக்கமளித்தார். அதன்படி, தமிழ்நாட்டில் உள்ள எண்ணூர் காமராஜர் துறைமுகத்தில் ரூ.4,288.26 கோடி மதிப்பீட்டில் இரண்டாவது சரக்கு முனையத்தை உருவாக்க ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. இப்புதிய முனையம் ஆண்டுக்கு 2 மில்லியன் கண்டெய்னர்களைக் கையாளும் திறன் கொண்டதாக அமைக்கப்பட உள்ளது.
மத்திய அமைச்சரவையின் இதர 4 முக்கிய முடிவுகள்:
இன்றைய கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்ட மற்ற நான்கு முக்கியத் திட்டங்களின் விவரம் வருமாறு:
உள்நாட்டு உற்பத்தி ஊக்குவிப்பு: ‘மேக் இன் இந்தியா’ (Make in India) திட்டத்தின் கீழ், கட்டுமானம் மற்றும் உள்கட்டமைப்புத் துறைகளில் பயன்படுத்தப்படும் கிரேன்கள், புல்டோசர்கள் போன்ற பெரிய இயந்திரங்கள் மற்றும் அவற்றின் உதிரிபாகங்கள், துணை அமைப்புகளை இந்தியாவிலேயே தயாரிப்பதை ஊக்குவிக்கும் திட்டத்திற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
புதிய விமான நிலையம்: அசாம் மாநிலம் சில்ச்சார் அருகே டோலு (Dolu) பகுதியில் புதிய விமான நிலையம் அமைப்பதற்கு அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது.
தபால் துறைத் திட்டங்கள் நீட்டிப்பு: தபால் துறையின் கீழ் செயல்படுத்தப்பட்டு வரும் தபால் செயல்பாட்டுத் திட்டம் (Postal Operations Scheme) மற்றும் தபால் துறையின் சொத்து மேலாண்மைத் திட்டம் (Asset Management Scheme) ஆகிய இரு திட்டங்களையும் மேலும் ஐந்து ஆண்டுகளுக்கு நீட்டிக்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

