தூத்துக்குடி திரேஸ்புரம் நாட்டுப்படகு மீன்பிடித் துறைமுகத்தில் இருந்து ஆழ்கடலுக்கு மீன்பிடிக்கச் சென்ற ஏராளமான நாட்டுப்படகுகள் சனிக்கிழமை கரை திரும்பின. இதில் மீனவர்களின் வலைகளில் தோல்பாறை உள்ளிட்ட மீன்கள் அதிகளவில் கிடைத்தன. இதனால் மீன்பிடித் துறைமுகத்தில் மீன்களை வாங்க வியாபாரிகளும், பொதுமக்களும் அதிகளவில் திரண்டனர்.
மீன்களின் வரத்து அதிகரிப்பால் விலை குறைந்து காணப்பட்ட நிலையில், சந்தையில் தோல்பாறை மீன் கிலோ ரூ.220, வாளை மீன் ரூ.450, பாறை மீன் ரூ.400, ஊளி மீன் ரூ.350, நண்டு ரூ.750, சீலா மீன் ரூ.850-க்கும் விற்பனையானது. சாளை மீன் ஒரு கூடை ரூ.1,500-க்கு விற்பனையானது.
நீண்ட நாட்களுக்குப் பின் மீன்களின் விலை கணிசமாகக் குறைந்ததால் பொதுமக்கள் ஆர்வத்துடன் மீன்களை வாங்கிச் சென்றனர்.

