தெற்கு உள்கர்நாடகா முதல் தென்மேற்கு வங்கக்கடல் பகுதி வரை நிலவும் வளிமண்டலக் சுழற்சி காரணமாக, தமிழ்நாட்டில் இன்று நீலகிரி, கோவை உள்ளிட்ட 16 மாவட்டங்களில் பலத்த காற்றுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகச் சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சுமார் 1.5 கிலோமீட்டர் உயரம் வரை தெற்கு உள்கர்நாடகா முதல் தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகள் வரை தமிழகம் வழியாக ஒரு வளிமண்டலக் காற்றழுத்தத் தாழ்வுப் பாதை நிலவுகிறது.

இதன் காரணமாக, இன்று தமிழ்நாட்டின் பின்வரும் 16 மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும் மற்றும் புதுச்சேரியிலும் இடி, மின்னல் மற்றும் மணிக்கு 40 முதல் 50 கிலோமீட்டர் வேகத்தில் வீசக்கூடும் பலத்த காற்றுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும்:

கனமழை பெய்யும் மாவட்டங்கள்: நீலகிரி, கோயம்புத்தூர், தேனி, திண்டுக்கல், ஈரோடு, கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், திருப்பத்தூர், திருச்சிராப்பள்ளி, பெரம்பலூர், அரியலூர், கடலூர், தஞ்சாவூர், திருவாரூர் மற்றும் மயிலாடுதுறை.

ஏனைய தமிழகப் பகுதிகள் மற்றும் காரைக்காலில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

நாளை (செப்டம்பர் 15) மழை விவரம்:

நீலகிரி, கோயம்புத்தூர், ஈரோடு, சேலம், கிருஷ்ணகிரி, தர்மபுரி, வேலூர், திருப்பத்தூர் மற்றும் ராணிப்பேட்டை ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் பலத்த காற்றுடன் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. மேலும் மதுரை, திண்டுக்கல், விருதுநகர் மற்றும் சிவகங்கை மாவட்டங்களில் ஒருசில இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும்.

சென்னையைப் பொறுத்தவரை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். மாலை அல்லது இரவு நேரங்களில் நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 34-35 டிகிரி செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 25-26 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.