"சாதி, மத எல்லைகளைக் கடந்து மனிதநேயத்தை மூச்சாகக் கொண்டு வாழ்ந்த தேவரின் லட்சியப் பாதையில் தொடர்ந்து பயணிப்போம்" என முதலமைச்சர் விஜய் தனது சமூக வலைதளப் பக்கத்தில் செய்தி வெளியிட்டுள்ளார்.

விடுதலைப் போராட்ட வீரர் பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் 119-ஆவது பிறந்தநாள் விழாவும், 64-ஆவது குருபூஜை விழாவும் இன்று விமரிசையாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. இதனை முன்னிட்டு, சென்னை நந்தனத்தில் அமைந்துள்ள பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் திருவுருவச் சிலைக்குத் தமிழக முதலமைச்சர் விஜய் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

இந்நிகழ்வில் சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர், அமைச்சர்கள் ஆதவ் அர்ஜுனா, புஸ்ஸி ஆனந்த், செங்கோட்டையன் ஆகியோர் உடன் சென்று முத்துராமலிங்க தேவரின் திருவுருவப் படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர். முதலமைச்சர் வருகையை முன்னிட்டு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்த நிலையில், அங்கு திரண்டிருந்த ஏராளமான பொதுமக்களுக்குக் கையசைத்தபடி நடந்து சென்ற முதலமைச்சர் விஜய், பின்னர் காரில் ஏறித் தலைமைச் செயலகத்திற்குப் புறப்பட்டுச் சென்றார்.

பசும்பொன் பயணம் தவிர்க்கப்பட்டது ஏன்?

முன்னதாக முதலமைச்சர் விஜய் ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன்னிற்கு நேரில் செல்வார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அவரது பயணத் திட்டம் திடீரென மாற்றப்பட்டது. பசும்பொன்னில் ஆண்டுதோறும் லட்சக்கணக்கான மக்கள் கூடுவதால், முதலமைச்சர் செல்லும் போது பாதுகாப்புச் சிக்கல்கள் ஏற்படும் எனக் கூறி, பசும்பொன் பயணத்தைத் தவிர்க்குமாறு உயர் காவல்துறை அதிகாரிகளும் உளவுத்துறையும் அளித்த ஆலோசனையின் பேரில் இந்த மாற்றம் செய்யப்பட்டதாகத் த.வெ.க. வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

முத்துராமலிங்க தேவர் ஜெயந்தியை முன்னிட்டு முதலமைச்சர் விஜய் வெளியிட்டுள்ள சமூக வலைதளப் பதிவில்: தேசியத்தையும், தெய்வீகத்தையும் தனது இரு கண்களாகப் போற்றி வாழ்ந்த சுதந்திரப் போராட்ட வீரர் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் பிறந்த நாள் மற்றும் குருபூஜை நாளில், அவரது நாட்டுப்பற்றையும், தியாகத்தையும், சமூகநீதிக்கான பங்களிப்பையும் போற்றி வணங்குகிறேன்.

வீரம் செறிந்த தனது பேச்சாற்றலால், நாட்டு மக்களிடையே சுதந்திரக் கனலை மூட்டிய தெய்வீகத் திருமகனார் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர், நேதாஜி சுபாஷ் சந்திர போஸின் கொள்கைகளைத் தீவிரமாகப் பரப்பி, இந்திய தேசிய ராணுவத்திற்கு ஆதரவைத் திரட்டி நாட்டின் விடுதலைக்காகப் போராடினார்.

சாதி, மத எல்லைகளைக் கடந்து மனிதநேயத்தை மட்டுமே தனது மூச்சாகக் கொண்டு வாழ்ந்த பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் லட்சியப் பாதையில் தொடர்ந்து பயணிப்போம்!" எனக் குறிப்பிட்டுள்ளார்.