அண்டை நாடான பூட்டானின் லெம்தாங்க் (Lemthang) பகுதியில் உள்ள பனி ஏரி (Glacial Lake) திடீரென உடைந்து பெரும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இந்த ஏரியிலிருந்து வெளியேறும் நீர், மோ சு (Mo Chhu) நதி வழியாகப் பாய்ந்து இந்திய எல்லையிலுள்ள சங்கோஷ் (Sankosh) நதியை வந்தடைகிறது.
இதன் காரணமாக, மேற்கு வங்க மாநிலத்தின் டார்ஜிலிங் மலைப்பகுதிகள், தெராய் மற்றும் துவார்ஸ் பகுதிகளில் வசிக்கும் மக்கள் உடனடியாக விழிப்புடன் இருக்குமாறு மாவட்ட நிர்வாகம் சார்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
வெள்ள அபாயம் குறித்துப் பேசிய மேற்கு வங்க அமைச்சர் நிசித் பிரமாணிக், மாநில பேரிடர் மேலாண்மைக் குழு முடுக்கி விடப்பட்டுள்ளதாகவும், தேசிய பேரிடர் மீட்புப் படை (NDRF) சம்பவ இடத்திற்கு விரைந்து கொண்டுள்ளதாகவும் தெரிவித்தார். அடுத்த 5 முதல் 6 மணி நேரத்திற்குள் வெள்ள நீர் சமவெளிப் பகுதிகளை வந்தடையும் என்பதால், மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு மாறுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.
இச்சம்பவம் குறித்து அலிபுர்துவார் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அமித் குமார் ஷா கூறுகையில், பூட்டான் அதிகாரிகளுடன் இணைந்து நிலைமை தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருவதாகவும், மக்கள் பீதியடைய வேண்டாம் என்றும் கேட்டுக்கொண்டுள்ளார்.
இதுவரை 4,000 முதல் 5,000 மக்கள் பாதுகாப்பான இடங்களில் உள்ள நிவாரண முகாம்களுக்கு மாற்றப்பட்டுள்ளனர். மேலும் 6,000-க்கும் மேற்பட்ட மக்களைப் பாதுகாப்பான இடங்களுக்கு அழைத்துச் செல்லும் பணிகள் நடைபெற்று வருகின்றன.
நிவாரண முகாம்களாகப் பள்ளிகள் பயன்படுத்தப்பட்டு, அங்கு உலர் உணவுகள், குடிநீர் மற்றும் சுகாதார வசதிகள் செய்யப்பட்டுள்ளன. தற்போது நதிநீரின் வேகம் சற்று குறைந்துள்ள போதிலும், அசம்பாவிதங்களைத் தவிர்க்கும் பொருட்டுச் சங்கோஷ் நதியோரப் பகுதிகளுக்கு விடுக்கப்பட்ட ரெட் அலர்ட் தொடர்ந்து அமலில் உள்ளது.

