நாகர்கோவில் மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் குப்பைகளை மக்கும் குப்பை, மக்காத குப்பை எனத் தரம் பிரித்து வழங்காத வீடுகள் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு அபராதம் விதிக்கப்படும் என்று மாநகராட்சி ஆணையர் ஐஸ்வர்யா எச்சரித்துள்ளார்.

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் மாநகராட்சியில் சுகாதாரத் துறை சார்ந்த கலந்தாய்வுக் கூட்டம், மாநகராட்சி ஆணையர் ஐஸ்வர்யா தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் பேசிய ஆணையர், நாகர்கோவில் மாநகராட்சிக்குட்பட்ட 52 வார்டுகளிலும் உள்ள வீடுகளில் பொதுமக்கள் குப்பைகளை மக்கும் குப்பை, மக்காத குப்பை என முறையாகத் தரம் பிரித்துத் தூய்மைப் பணியாளர்களிடம் வழங்க வேண்டும் என்று அறிவுறுத்தினார்.

குப்பைகளைத் தரம் பிரித்து வழங்காத வீடுகள் தொடர்ந்து கண்காணிக்கப்படும். முதற்கட்டமாகச் சம்பந்தப்பட்ட வீடுகளில் 'சிவப்பு வண்ண ஸ்டிக்கர்' ஒட்டப்படும். அதன்பிறகும் குப்பைகளைத் தரம் பிரித்து வழங்காமல் இருந்தால், சம்பந்தப்பட்ட வீடுகளுக்குக் கடுமையான அபராதம் விதிக்கப்படும் என ஆணையர் எச்சரித்தார்.

உணவகங்கள் (ஹோட்டல்கள்), பழக்கடைகள், தேநீர்க் கடைகள் உள்ளிட்ட வணிக நிறுவனங்கள் தங்களது கடைகளின் முன்புறம் இரண்டு குப்பைத் தொட்டிகளை அமைத்து, மக்கும் மற்றும் மக்காத குப்பைகளைத் தனித்தனியாகச் சேகரித்துத் தூய்மைப் பணியாளர்களிடம் வழங்க வேண்டும்.

வாகனங்களில் செல்வோர் குப்பைகளைச் சாலையோரங்கள், ஆற்றங்கரைகள் மற்றும் பொது இடங்களில் கொட்டிச் செல்வதைத் தவிர்க்க வேண்டும். அவ்வாறு பொது இடங்களில் குப்பைகளைக் கொட்டுபவர்களுக்குச் சம்பவ இடத்திலேயே அபராதம் விதிக்கப்படும். பொது இடங்கள், பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் அமைந்துள்ள பகுதிகளில் புகைபிடிப்பவர்களுக்கும் அபராதம் விதிக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

பொதுமக்கள் கடைகளுக்குச் செல்லும்போது வீட்டிலிருந்தே துணிப்பையை எடுத்துச் சென்று பொருட்களை வாங்க வேண்டும். நெகிழிப் பைகளின் (பிளாஸ்டிக்) பயன்பாட்டை முற்றிலும் தவிர்த்து, நாகர்கோவில் மாநகராட்சியைத் தூய்மையான மற்றும் சுற்றுச்சூழலுக்கு உகந்த மாநகரமாக உருவாக்க அனைவரும் ஒத்துழைக்க வேண்டும் என மாநகராட்சி ஆணையர் ஐஸ்வர்யா கேட்டுக் கொண்டுள்ளார்.