திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று (28.10.2026) நடைபெற்ற நிகழ்வில், மாநில அளவிலான நீச்சல் போட்டிக்குத் தேர்வாகியுள்ள அரசுப் பள்ளி மாணவிகளை ஊக்குவிக்கும் வகையில் மாவட்ட ஆட்சித்தலைவர் ஆனந்த் மோகன், நவீன நீச்சல் உடைகளை வழங்கி வாழ்த்தினார்.

திருநெல்வேலி மாநகராட்சி, டவுன் மீனாட்சிபுரம் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியைச் சேர்ந்த மாணவிகளான அதர்வா பொன்ராஜ், ஸ்ரீமதி மற்றும் மதுபிரதிஷியா ஆகியோர் மாவட்ட அளவில் நடைபெற்ற நீச்சல் போட்டிகளில் சிறப்பாகச் செயல்பட்டு வெற்றி பெற்றனர். இதனைத் தொடர்ந்து, அவர்கள் மாநில அளவில் நடைபெறவுள்ள நீச்சல் போட்டிகளில் பங்கேற்கத் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

அரசுப் பள்ளி மாணவிகளின் விளையாட்டுத் திறமையை மேலும் ஊக்குவிக்கும் பொருட்டு, மாவட்ட ஆட்சியரின் தன்விருப்ப நிதியிலிருந்து ரூ. 1 லட்சம் மதிப்பிலான நவீன நீச்சல் உடைகளை ஆட்சியர் திரு. ஆனந்த் மோகன் நேரில் வழங்கிப் பாராட்டினார். மேலும், இம்மாணவிகளுக்கு மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் தேவையான அனைத்து வசதிகளும் உதவிகளும் செய்து தரப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

இந்நிகழ்வின் போது, மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் சிவகுமார், மாவட்ட ஒருங்கிணைப்பாளர் சுரேஷ், பள்ளித் தலைமையாசிரியர் திருமதி. முகமது பாத்திமா அனிஷா உட்பட துறை சார்ந்த அலுவலர்கள் பலர் உடனிருந்தனர்.