ஈரோட்டில் தந்தை பெரியார் பிறந்த நாள் பேரணிக்கும், குடியாத்தத்தில் பேரறிஞர் அண்ணா பிறந்த நாள் பேரணிக்கும் காவல் துறை அனுமதி மறுத்ததைக் கண்டித்து, முதலமைச்சர் சி. ஜோசப் விஜய்க்கு எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் தனது எக்ஸ் தளப் பதிவில் கூறியிருப்பதாவது: "தந்தை பெரியாரின் பிறந்த நாளை முன்னிட்டு அவர் பிறந்த ஈரோட்டு மண்ணில் திராவிடர் கழகத்தின் சார்பில் செப்டம்பர் 17-ஆம் தேதி ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பேரணிக்கும், குடியாத்தத்தில் பேரறிஞர் அண்ணா பிறந்த நாளை முன்னிட்டு திராவிட முன்னேற்றக் கழகம் உள்ளிட்ட கட்சிகள் நடத்தவிருந்த பேரணிக்கும், இந்த அரசின் காவல் துறை அனுமதி மறுத்திருப்பதை வன்மையாகக் கண்டிக்கிறேன்.

முதலமைச்சரின் கட்டுப்பாட்டில் இருக்கும் காவல் துறை, வலதுசாரி அமைப்புகளின் பேரணிகளுக்கு உடனடியாக அனுமதி வழங்கிவிட்டு, தமிழ்நாட்டைச் செதுக்கிய பெரியார் – அண்ணாவின் பிறந்த நாள் பேரணிகளுக்கு அனுமதி மறுப்பது ஏன்?

பெரியாரையும், அண்ணாவையும் கொள்கைத் தலைவர்கள் என்று சொல்லிக்கொள்ளும் முதலமைச்சர், யாரைத் திருப்திப்படுத்த இதைச் செய்கிறார்? காவல் துறை முதலமைச்சரின் கட்டுப்பாட்டில் இருக்கிறதா? அல்லது அவரது காவி எஜமானர்களின் கட்டுப்பாட்டுக்குச் சென்றுவிட்டதா?

பெரியாரையும் அண்ணாவையும் புறக்கணிக்கும் முதலமைச்சரின் அடிமைத்தனத்தையும் ஆணவத்தையும் பொதுமக்கள் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள் என்பதை உணர்ந்து, உடனடியாக இந்த இரு பேரணிகளுக்கும் காவல் துறை அனுமதி வழங்க வேண்டும்." இவ்வாறு எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார்.