தனியார் பள்ளிகளுக்கு அனுமதி வழங்க ரூ.400 கோடி வரை லஞ்சம் பெற்றதாகக் கைது செய்யப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஸை 5 நாட்கள் போலீஸ் காவலில் விசாரிக்கக் கோரிய மனுவின் மீதான தீர்ப்பை ஊழல் தடுப்புச் சிறப்பு நீதிமன்றம் நவம்பர் 2-ஆம் தேதிக்குத் தள்ளிவைத்தது.
கடந்த திமுக ஆட்சிக் காலத்தில் தனியார் பள்ளிகளுக்கு 20 ஆண்டுகளுக்கு ஒருமுறை நிரந்தர அங்கீகாரம் வழங்க ரூ.400 கோடி வரை லஞ்சம் வசூலிக்கப்பட்டதாக எழுந்த புகாரில், அப்போதைய பள்ளிக் கல்வித் துறை அமைச்சரும் திமுக மூத்த தலைவருமான அன்பில் மகேஸைச் சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்து புழல் சிறையில் அடைத்துள்ளனர்.
இவ்வழக்கில் சிறையில் உள்ள அன்பில் மகேஸை 5 நாட்கள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரி சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் மனு தாக்கல் செய்திருந்தனர். இம்மனு சென்னை ஊழல் தடுப்புச் சிறப்பு நீதிமன்ற நீதிபதி எல்.எஸ். சத்தியமூர்த்தி முன்னிலையில் இன்று விசாரணைக்கு வந்தது. புழல் சிறையிலிருந்து அன்பில் மகேஸ் நேரில் ஆஜர்படுத்தப்பட்டார்.
அன்பில் மகேஸ் தரப்பு வழக்கறிஞர் ஆவேசம்:
அன்பில் மகேஸ் சார்பில் மூத்த வழக்கறிஞர் அபுடுகுமார் ராஜரத்தினம் ஆஜராகி முன்வைத்த வாதங்கள்: "சிறையில் சரியான உணவு வழங்கப்படாததால் அன்பில் மகேஸுக்கு 2 முதல் 4 கிலோ வரை உடல் எடை குறைந்துள்ளது. அவர் தூங்கும்போது கூட விளக்குகளை எரிய விட்டுத் துன்புறுத்துகின்றனர்.
செப்டம்பர் 16-இல் சோதனை நடத்தப்பட்டு, செப்டம்பர் 18-இல் 8 மணி நேரம் விசாரணை நடத்தப்பட்டது. கேட்ட கேள்விகளுக்கெல்லாம் பதிலளித்து முழு ஒத்துழைப்பு அளித்தும், ஜாமீன் பெறுவதைத் தடுப்பதற்காகவே காவல் மனுவைப் பயன்படுத்துகின்றனர்.
பள்ளிகள் கூட்டாக வைத்த கோரிக்கையின் பேரிலேயே 20 ஆண்டுகளுக்கு ஒருமுறை அங்கீகாரத்தைப் புதுப்பிக்கும் விதமாக அரசாணை வெளியிடப்பட்டது. அதைத் தற்போது ஊழல் என்று கூறுகின்றனர்.
மும்பைத் தாக்குதல் குற்றவாளி அஜ்மல் கசாப்பிற்குக்கூட அனைத்து வசதிகளும் செய்து தரப்பட்டன. ஆனால் மாநிலத்திற்கு உழைத்த அன்பில் மகேஸுக்கு அடிப்படை வசதிகளும், வீட்டு உணவும் கூட மறுக்கப்படுகிறது" எனத் தெரிவித்தார்.
அன்பில் மகேஸ் தரப்பு வழக்கறிஞர் ரிச்சர்ட்சன் வில்சனும் உச்ச நீதிமன்றத் தீர்ப்புகளை மேற்கோள்காட்டி வீட்டு உணவு வழங்க வாதாடினார்.
போலீஸ் தரப்பு விளக்கம்:
காவல்துறை சார்பில் கூடுதல் குற்றவியல் வழக்கறிஞர் உஷா ராணி ஆஜராகி, சிறையில் உரிய மருத்துவ வசதிகள் செய்து தரப்படும் என்றும், வீட்டு உணவு கோரும் மனு குறித்துப் பதிலளிக்க அவகாசம் தேவை என்றும் கூறினார்.
தொடர்ந்து விசாரணை அதிகாரி செந்தில் சாட்சி கூண்டில் ஆஜராகி, "தலைமறைவாக இருந்த முன்னாள் எம்.எல்.ஏ. முத்துக்குமார் பற்றிய விவரங்கள், கைமாறிய லஞ்சப் பணம் சென்ற இடம், மகேஸ் மற்றும் அவரது குடும்பத்தினரின் சொத்துக்கள், பினாமிகள் குறித்த ஆவணங்களை விசாரிக்க 5 நாட்கள் காவல் அவசியமாகும்" எனத் தெரிவித்தார்.
இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி எல்.எஸ். சத்தியமூர்த்தி, அன்பில் மகேஸை காவலில் எடுத்து விசாரிக்கக் கோரும் மனு மீதான உத்தரவை வரும் திங்கட்கிழமைக்கு (நவம்பர் 2) தள்ளிவைத்து உத்தரவிட்டார். அன்றைய தினமே அவரது ஜாமீன் மனு மீதும் காவல்துறை பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

