அம்பை தொகுதியில் போட்டியிடும் சீமானுக்கு திமுக ஆதரவு அளிக்குமா என்ற கேள்விக்கு, "தேர்தல் அறிவிக்கப்படட்டும், அதன்பிறகு பேசலாம்" என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பதிலளித்துள்ளார்.
தமிழகத்தில் அம்பாசமுத்திரம், திருச்சி கிழக்கு, கரூர், விராலிமலை மற்றும் பெருந்துறை ஆகிய 5 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் அறிவிப்பு இன்னும் சில வாரங்களில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. உயர்நீதிமன்றத் தீர்ப்பு வந்ததும் இதற்கான அறிவிப்பைத் தேர்தல் ஆணையம் வெளியிட வாய்ப்புள்ளது.
இடைத்தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் தொகுதியில் நாம் தமிழர் கட்சி சார்பில் தான் போட்டியிடப்போவதாகத் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிவித்துள்ளார்.
முன்னதாக செய்தியாளர்களிடம் பேசிய சீமானிடம், "அம்பை இடைத்தேர்தலில் திமுக, அதிமுக போன்ற கட்சிகள் உங்களை ஆதரித்தால் ஏற்றுக்கொள்வீர்களா?" என்று கேட்கப்பட்டது. அதற்குப் பதிலளித்த அவர், "பசியில் இருக்கும்போது பிரியாணி தருகிறேன் என்று சொன்னால் வேண்டாம் என்றா சொல்வோம்? நிச்சயம் ஏற்றுக்கொள்வோம்" எனக் கூறியிருந்தார். இதனால் அம்பை தொகுதியில் சீமான் எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளராகக் களம் இறக்கப்படுவாரா என்ற எதிர்பார்ப்பு எழுந்தது.
இந்தச் சூழலில், பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் குரு பூஜையையொட்டி ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன் கிராமத்தில் உள்ள அவரது நினைவிடத்தில் திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.அப்போது செய்தியாளர்களுடன் பேசிய ஸ்டாலின், இடைத்தேர்தல் குறித்த கேள்விக்கு பதிலளித்தார்.
அப்போது"அம்பாசமுத்திரம் இடைத்தேர்தலில் போட்டியிடும் சீமானுக்கு திமுக ஆதரவு அளிக்குமா?" என்று கேள்வி எழுப்பப்பட்டது. அதற்குப் பதிலளித்த மு.க.ஸ்டாலின், "முதலில் தேர்தல் அறிவிக்கப்படட்டும்... அதன்பிறகு அது குறித்துப் பேசலாம்" என்று சுருக்கமாகவும் பதிலளித்துச் சென்றார்.

