நெல்லையில் செய்தியாளர்களைச் சந்தித்த நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், காலியாக உள்ள அம்பாசமுத்திரம் தொகுதி இடைத்தேர்தலில் தான் போட்டியிட உள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.
சட்டமன்றத் தேர்தலில் அதிமுக சார்பில் வெற்றிபெற்ற இசக்கி சுப்பையா, தனது எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்துவிட்டு தவெகவில் (தமிழக வெற்றிக் கழகம்) இணைந்தார். இதனால் காலியாக அறிவிக்கப்பட்டுள்ள அம்பாசமுத்திரம் தொகுதிக்கு விரைவில் இடைத்தேர்தல் நடைபெற உள்ளது.
இந்நிலையில், திருநெல்வேலியில் செய்தியாளர்களைச் சந்தித்த நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசியதாவது: "இடைத்தேர்தல் நடைபெறவுள்ள 5 தொகுதிகளிலும் நாம் தமிழர் கட்சி வேட்பாளர்களைக் களம் இறக்கிப் போட்டியிடும். அதில் அம்பாசமுத்திரம் இடைத்தேர்தலில் நான் நேரடியாகப் போட்டியிட உள்ளேன். என்னை பார்த்து தவெகவினர் ஏன் பயப்படுகிறார்கள் என்று தெரியவில்லை.
நான் அனைத்துச் சமூகங்களுக்குமான பொது வேட்பாளர். சொந்த பந்தம், சாதி என்று பார்த்தால் நான் தமிழ்நாட்டில் எந்தத் தொகுதியிலும் போட்டியிட முடியாது. உறவுகள் வேறு, அரசியல் நிலைப்பாடுகள் என்பது வேறு. நான் எப்போதுமே மக்கள் நலனுக்கான பொது வேட்பாளர்தான்" என்று கூறினார்.
கடந்த சட்டமன்றத் தேர்தலில் காரைக்குடி தொகுதியில் போட்டியிட்டுத் தோல்வியைச் சந்தித்த சீமான், தற்போது நெல்லை மாவட்டத்தின் முக்கியத் தொகுதியான அம்பாசமுத்திரத்தில் போட்டியிட உள்ளதாக அறிவித்துள்ளது தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் விவாதத்தையும் எதிர்ப்பார்ப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

