திருநெல்வேலி மாவட்டம், பணகுடியில் அருட்சகோதரர்களால் நிர்வகிக்கப்பட்டு வரும் திரு இருதய மேல்நிலைப் பள்ளியில், சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் பசுமையை வலியுறுத்தும் வகையில் 1 லட்சத்திற்கும் அதிகமான விதைப்பந்துகள் தயாரிக்கும் பிரம்மாண்ட முகாம் நடைபெற்றது.

பள்ளியில் பயிலும் 1,350 மாணவ - மாணவிகளும் இவ்வமைப்பில் தீவிரமாகப் பங்கேற்றனர். இதற்காகப் பள்ளி வகுப்பறைகள்தோறும் "விதைப் பெட்டி" வைக்கப்பட்டு, கடந்த 10 நாட்களாகப் புளி, வேம்பு உள்ளிட்ட பல்வேறு வகையான மரங்களின் விதைகள் மூடைக் கணக்கில் சேகரிக்கப்பட்டன. மாணவர்களுடன் இணைந்து ஆசிரியர்களும் விதைகளை வழங்கினர். உள்ளூர் பிரமுகர்கள் விதைப்பந்து தயாரிப்பிற்கான செம்மண் மற்றும் களிமண்ணை வழங்கி ஆதரவளித்தனர்.

நிகழ்ச்சிக்குப் பள்ளியின் தலைமையாசிரியர் அருட்சகோதரர் முனைவர் செல்வராஜ் தலைமை தாங்கினார். நாட்டு நலப்பணித் திட்ட (NSS) அலுவலர் ஆனந்த் வரவேற்புரையாற்றினார். பசுமைப்படைப் பொறுப்பு ஆசிரியைகள் பீனா, ஜெயா, சகாய ஜெனிபர், அகிலா மற்றும் மஞ்சு ரேகா ஆகியோர் முன்னிலை வகித்தனர். உதவித் தலைமையாசிரியர் ரெக்ஸ் நிகழ்வை ஒருங்கிணைத்தார்.

"ஒரு கோடி விதைப்பந்து இயக்கம்" எனும் முழக்கத்துடன் தமிழகமெங்கும் விழிப்புணர்வு ஏற்படுத்தி வரும் பிரச்சாரகர் வெங்காடம்பட்டி பூ. திருமாறன், விதைப்பந்து தயாரிப்பினைத் தொடங்கி வைத்துப் பேசினார். தொடர்ந்து, விளையாட்டு மைதானத்தில் குவிக்கப்பட்டிருந்த மண்ணைக் கொண்டு, 10-ஆம் வகுப்பு மற்றும் 12-ஆம் வகுப்பு மாணவர்கள் உட்பட அனைத்து மாணவர்களும் திருவிழாவைப் போல உற்சாகமாக விதைப்பந்துகளைச் செய்து குவித்தனர்.

சாதனை படைத்த மாணவ - மாணவிகள் மற்றும் ஆசிரியர்கள் என மொத்தம் 1,400 பேருக்குப் பிரச்சாரகர் திருமாறன் பாராட்டுப் பத்திரங்களை வழங்கி கௌரவித்தார். பள்ளியின் பசுமைப் படை மற்றும் நாட்டு நலப்பணித் திட்டம் இணைந்து மேற்கொண்ட இந்தச் சுற்றுச்சூழல் முயற்சியைப் பணகுடி பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் வெகுவாகப் பாராட்டி வருகின்றனர்.