விநாயகர் சதுர்த்தி திருநாளை முன்னிட்டு, "அனைத்து நற்செயல்களும் விநாயகப் பெருமானின் அருளால் இனிதே நிறைவேறி, ஒவ்வொரு குடும்பத்திலும் மகிழ்ச்சியும் அமைதியும் பெருகட்டும்" எனத் தமிழக முதலமைச்சர் விஜய் தனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார். நாடு முழுவதும் இன்று விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்பட்டு வருகிறது.

இத்தினத்தை முன்னிட்டுத் திருக்கோவில்களில் விநாயகப் பெருமானுக்குச் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்று வருகின்றன. மேலும், பொதுமக்கள் வீடுகளில் களிமண்ணாலான விநாயகர் சிலைகளை வைத்தும், பொது இடங்களில் பிரம்மாண்டப் பந்தல்களில் விநாயகர் சிலைகளைப் பிரதிஷ்டை செய்தும் வழிபாடுகளை நடத்தி வருகின்றனர்.

விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டுத் தமிழக முதலமைச்சர் விஜய் வெளியிட்டுள்ள சமூக வலைதள வாழ்த்துப் பதிவில் கூறியிருப்பதாவது: "விநாயகர் சதுர்த்தி திருநாளில், மக்கள் அனைவருக்கும் எனது உளமார்ந்த நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

இத்திருநாளில் தொடங்கும் அனைத்து நற்செயல்களும் விநாயகப் பெருமானின் அருளால் இனிதே நிறைவேறட்டும். புதிய நம்பிக்கைகள் மலர்ந்து, நாட்டின் ஒவ்வொரு குடும்பத்திலும் மகிழ்ச்சியும், அமைதியும், வளமும் பெருக வேண்டும். மக்களின் நல்லெண்ணங்கள் அனைத்தும் ஈடேறி, அவர்கள் எடுக்கும் அனைத்து முயற்சிகளும் வெற்றியின் பாதையில் பயணிக்க இறைவனை வேண்டுகிறேன்." எனத் தெரிவித்துள்ளார்.