தமிழக சட்டப்பேரவையில் தமிழக வெற்றிக் கழகம் (த.வெ.க.) ஆட்சியமைப்பதற்கான நம்பிக்கைத் தீர்மானத்தின்போது, அதிமுக கொறடாவின் உத்தரவை மீறி 25 அதிமுக எம்.எல்.ஏ-க்கள் த.வெ.க-வுக்கு ஆதரவாக வாக்களித்தனர்.

கொறடா உத்தரவை மீறியதால் அவர்கள் மீது தகுதிநீக்க நடவடிக்கை எடுக்கக் கோரி, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தரப்பில் பேரவைத் தலைவரிடம் புகார் அளிக்கப்பட்டது.

புகாருக்குள்ளான 25 எம்.எல்.ஏ-க்களில் 4 பேர் தங்கள் பதவியை ராஜினாமா செய்தனர். மீதமுள்ள 21 எம்.எல்.ஏ-க்களும் எடப்பாடி பழனிசாமியிடம் மன்னிப்புக் கடிதம் அளித்ததால், அவர்களுக்கு எதிரான தகுதிநீக்க மனுவை எடப்பாடி பழனிசாமி திரும்பப் பெற்றார். அதனைத் தொடர்ந்து, 21 பேர் மீதான தகுதிநீக்க நடவடிக்கையைக் கைவிடுவதாகச் சட்டப்பேரவைத் தலைவர் உத்தரவிட்டார்.

தகுதிநீக்க நடவடிக்கை கைவிடப்பட்டதை ரத்து செய்யக் கோரி வழக்கறிஞர் பி.வி. செல்வகுமார் சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த பொதுநல மனு தள்ளுபடி செய்யப்பட்டது. உயர்நீதிமன்றத்தின் இந்த உத்தரவை எதிர்த்து, தேசிய மக்கள் சக்தி கட்சியின் தலைவர் ரவி உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார்.

இம்மனு உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தபோது, "இவ்விவகாரம் ஏற்கனவே முடிந்துவிட்ட ஒன்றாகும். இதில் புதிதாக என்ன உத்தரவு பிறப்பிக்க முடியும்?" எனக் கேள்வி எழுப்பிய நீதிபதிகள், வழக்கினை முழுமையாக முடித்துவைத்து உத்தரவிட்டனர்.