தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியைச் சேர்ந்த ஓய்வுபெற்ற அரசு ஊழியரான கோவிந்தராஜன், தனியார் வங்கியின் பெயரில் இயங்கி வரும் வாட்ஸ்அப் குழு ஒன்றில் சமீபத்தில் இணைந்துள்ளார். அந்த வாட்ஸ்அப் குழுவின் அட்மின்கள், இந்தத் குழுவின் வர்த்தக நடவடிக்கைகளில் நீங்கள் முதலீடு செய்தால் அதிக லாபம் சம்பாதிக்கலாம் என ஆசை வார்த்தை காட்டியுள்ளனர்.

மேலும், அதில் இருக்கக்கூடிய மற்ற உறுப்பினர்கள் ஆன்லைன் வர்த்தகத்தில் முதலீடு செய்தது போலவும், அதன் மூலம் அவர்கள் அதிக லாபம் பெற்றிருப்பது போலவும் தகவல்களைப் பகிர்ந்துள்ளனர். இதனை நம்பிய கோவிந்தராஜன், அடுத்தடுத்து 10 தவணைகளாக இந்த வாட்ஸ்அப் குழுவிற்கு ரூ.7½ லட்சம் வரை அனுப்பி உள்ளார்.

ஆனால், அட்மின்கள் காட்டியபடி மற்றவர்களுக்கு லாபம் வந்தது போல், இவருக்கு எந்தப் பணமும் வரவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த கோவிந்தராஜன், வாட்ஸ்அப் குழு அட்மின்களைத் தொடர்புகொள்ள முயன்ற போது அவர்களைத் தொடர்புகொள்ள முடியவில்லை.

இதன் பின்னர்தான் தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த அவர், தூத்துக்குடி சைபர் குற்றப்பிரிவு போலீசில் ஆன்லைன் மூலம் புகார் அளித்தார். அதன்பேரில் தூத்துக்குடி சைபர் குற்றப்பிரிவு போலீசார் வழக்குப் பதிவு செய்து மர்ம நபர்களைத் தேடி வருகின்றனர்.