தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி குருமலை மேற்குத் தெருவைச் சேர்ந்த பொன்னுச்சாமி என்பவரது மகன் கருப்பசாமி (46). இவர் இருசக்கர வாகனத்தில் காய்கறிகளை மொத்தமாகக் கொள்முதல் செய்து, அதனை கிராமங்களுக்குச் சென்று நேரடியாக விற்பனை செய்யும் தொழில் செய்து வந்துள்ளார்.
இந்நிலையில், நேற்று கோவில்பட்டி புது ரோடு பகுதியில் உள்ள ஒரு ஆவின் தேநீர்க் கடைக்குத் தேநீர் அருந்துவதற்காக அவர் வந்துள்ளார். அப்போது தனது இருசக்கர வாகனத்தை நிறுத்திவிட்டுத் தேநீர்க் கடைக்குச் சென்ற அவர், அங்கிருந்தவர்களிடம் "தன்னை ஏதோ கடித்தது போல இருக்கிறது" என்று கூறிக்கொண்டே திடீரெனத் தரையில் அமர்ந்து சுயநினைவின்றி மயங்கிப் படுத்துள்ளார்.
இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த அருகில் இருந்தவர்கள் அவரை உடனடியாக மீட்டு கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு அவரைப் பரிசோதனை செய்த மருத்துவர்கள், அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்தனர்.
இச்சம்பவம் குறித்து கோவில்பட்டி கிழக்கு காவல் நிலையப் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இறந்த கருப்பசாமியின் உடல் பரிசோதனைக்காக கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. கருப்பசாமி விஷப்பூச்சி அல்லது பாம்பு கடித்து உயிரிழந்தாரா? அல்லது வேறு ஏதேனும் காரணமா என்பது குறித்து உடற்கூறாய்வு அறிக்கைக்குப் பின்னரே முழு விவரம் தெரியவரும் என்று போலீசார் தெரிவித்தனர்.

