நெல்லையில் நடைபெற்ற 4 மாவட்டக் கல்லூரி முதல்வர்கள் மற்றும் மாணவர்களுடனான மண்டல ஆய்வுக் கூட்டத்தில் பங்கேற்ற உயர்கல்வித்துறை அமைச்சர் பெ. விஸ்வநாதன் விரைவில் 10 லட்சம் கல்லூரி மாணவர்களுக்கு ரூ.2,000 கோடி மதிப்பில் மடிக்கணினிகள் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக தெரிவித்தார்.
திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில், திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி மற்றும் கன்னியாகுமரி ஆகிய நான்கு மாவட்டங்களைச் சேர்ந்த அரசு மற்றும் அரசு உதவிபெறும் கல்லூரி முதல்வர்களுடனான கருத்துக் கேட்புக் கூட்டம் மற்றும் மாணவர்களுடனான கலந்துரையாடல் கூட்டம் உயர்கல்வித்துறை அமைச்சர் பெ. விஸ்வநாதன் தலைமையில் இன்று நடைபெற்றது.
இந்நிகழ்வில் தமிழ்நாடு தொழில்நுட்பக் கல்வி இயக்குநர் ரத்தினசாமி, தமிழ்நாடு மாநில உயர்கல்வி மன்ற துணைத் தலைவர் விஜயகுமார், திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் ஆனந்த் மோகன், நாடாளுமன்ற உறுப்பினர்கள் ராபர்ட் புரூஸ் (திருநெல்வேலி), விஜய் வசந்த் (கன்னியாகுமரி), சட்டமன்ற உறுப்பினர்கள் ஆர்.எஸ். முருகன் (திருநெல்வேலி), ரெட்டியார்பட்டி வெ. நாராயணன் (நாங்குநேரி) ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில் உயர்கல்வித்துறை அமைச்சர் திரு. பெ. விஸ்வநாதன் தெரிவித்ததாவது: "தமிழ்நாடு முதலமைச்சர் உத்தரவின்படி, உயர்கல்வி பயிலும் மாணவர்களுக்கு எந்தவிதத் தடையுமின்றிச் சிறப்பான கல்வி பயில்வதற்கான சூழ்நிலையை உருவாக்கத் தமிழ்நாடு உயர்கல்வித்துறை சார்பில் 3-வது மண்டல அளவிலான ஆய்வுக் கூட்டம் நடைபெறுகிறது.
மாணவர் சேர்க்கையை அதிகரித்தல், பாடத்திட்டங்களின் தரம் மற்றும் கல்லூரிகளின் கல்விசார் செயல்பாடுகளை மேம்படுத்துவது குறித்துக் கல்லூரி முதல்வர்கள் மற்றும் தாளாளர்களுடன் விரிவாகக் கலந்தாலோசிக்கப்பட்டது.
இக்கூட்டத்தில் மாணவர்கள் தங்களின் போக்குவரத்து வசதி, கல்விக்கடன், விளையாட்டு மைதானம், கழிப்பறை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் மற்றும் கூடுதல் உட்கட்டமைப்புகளை ஏற்படுத்தித் தரக் கோரிக்கை விடுத்தனர். அதேபோல், காலியாக உள்ள பேராசிரியர் பணியிடங்களை நிரப்புதல் மற்றும் கூடுதல் வகுப்பறைகள் அமைப்பது குறித்துப் பேராசிரியர்கள் கோரிக்கை முன்வைத்தனர்.
கல்லூரி உட்கட்டமைப்பை மேம்படுத்தப் பெருந்தலைவர் காமராஜர் கல்லூரி மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் அரசு ரூ.1,000 கோடி ஒதுக்கீடு செய்துள்ளது. அதேபோல் விரைவில் 10 லட்சம் மாணவர்களுக்கு ரூ.2,000 கோடி மதிப்பில் மடிக்கணினிகள் வழங்கத் தேவையான நடவடிக்கைகள் தீவிரமாக எடுக்கப்பட்டு வருகின்றன.
உலகமே செயற்கை நுண்ணறிவுத் (AI) தொழில்நுட்பத்திற்கு மாறிவரும் சூழலில், அத்தொழில்நுட்பத்தை ஆளுமை செய்யும் இடத்தில் தமிழர்கள் உள்ளனர். எனவே மாணவர்களுக்குச் செயற்கை நுண்ணறிவுப் பயிற்சி அளிக்க உயர்கல்வித்துறை பல்வேறு புதிய முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது."
முன்னதாக, ரூ.2.04 கோடி மதிப்பிலான கல்விக்கடனுக்கான ஆணைகளை 14 கல்லூரி மாணவர்களுக்கு அமைச்சர் திரு. பெ. விஸ்வநாதன் வழங்கினார். தொடர்ந்து, திருநெல்வேலி அரசு பொறியியல் கல்லூரியில் பயிலும் மாணவர்களுடனும் அமைச்சர் நேரில் கலந்துரையாடினார்.
இந்நிகழ்வில் கல்லூரி கல்வி இயக்கக இணை இயக்குநர் (திட்டம்) முனைவர் சிந்தியா செல்வி, மண்டல கல்லூரி கல்வி இணை இயக்குநர் விக்டோரியா தங்கம், தொழில்நுட்பக் கல்வி இயக்கக கூடுதல் இயக்குநர் ஸ்ரீனிவாசன் உள்ளிட்ட துறை சார்ந்த அலுவலர்கள், கல்லூரி முதல்வர்கள் மற்றும் மாணவர்கள் பலர் கலந்துகொண்டனர்.

