தூத்துக்குடி மாவட்டம், ஆழ்வார்திருநகரி ஊராட்சி ஒன்றியம், நாலுமாவடி ஊராட்சிக்குட்பட்ட கீழ்மாவடி கிராமத்தில் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை சார்பில் 'விளை நிலம் காப்போம்' முகாம் இன்று நடைபெற்றது.
இம்முகாமினை மாவட்ட ஆட்சியர் விஷு மகாஜன் முன்னிலையில், மாவட்ட கண்காணிப்பு அலுவலரும் வேளாண்மை இயக்குநருமான கே.வி. முரளிதரன் தொடங்கி வைத்தார். தொடர்ந்து, பசுந்தாள் உரம் மற்றும் தக்கைப் பூண்டு சாகுபடி செய்யப்பட்ட விவசாயிகளின் விளை நிலங்களை நேரில் பார்வையிட்ட அவர், இரசாயன உரப் பயன்பாட்டைக் குறைத்து இயற்கை உரங்களைப் பயன்படுத்த வேண்டும் என விவசாயிகளுக்கு ஆலோசனைகளை வழங்கினார்.
பின்னர், பாரம்பரிய நெல் ரகங்கள், பசுந்தாள் உரம், தக்கைப் பூண்டு மற்றும் இயற்கை இடு பொருட்கள் காட்சிப்படுத்தப்பட்ட விழிப்புணர்வுக் கண்காட்சி அரங்கினை அதிகாரிகள் பார்வையிட்டனர்.
நிகழ்ச்சியில், 1 விவசாயிக்கு 50 சதவீத மானிய விலையில் நெல் மற்றும் தக்கைப் பூண்டு விதைகளும், 1 விவசாயிக்கு 10 சதவீத மானியத்தில் நெல் ரக விதைகளும், 2 விவசாயிகளுக்கு 50 சதவீத மானியத்தில் 'ஜெயராமன்' பாரம்பரிய நெல் ரக விதைகளும் என மொத்தம் 4 விவசாயிகளுக்கு இயற்கை வேளாண் இடு பொருட்களை மாவட்ட கண்காணிப்பு அலுவலர் வழங்கிப் பாராட்டினார்.
இந்நிகழ்வில் வேளாண் இணை இயக்குநர் கிருஷ்ணகுமார், துணை இயக்குநர் பூவரகன், உதவி இயக்குநர் இராமகிருஷ்ணன், திருச்செந்தூர் வருவாய் கோட்டாட்சியர் கௌதம் மற்றும் அரசு அலுவலர்கள் பலர் கலந்துகொண்டனர்.

