"ஒரு கோடி விதைப்பந்துகள் தமிழ்நாட்டில் செய்யப்பட்டு வீசப்பட்டவுடன் அது இந்தியா முழுவதும் எதிரொலிக்கும். கோடியைத் தாண்டி இந்தப் புரட்சி தொடரும் போது அது உலக நாடுகளில் விழிப்புணர்வு அதிர்வலைகளை கண்டிப்பாக ஏற்படுத்தும் என விதைப்பந்து வித்தகர் வெங்கடாம்பட்டி பூ.திருமாறன் தெரிவித்துள்ளார்.
கடந்த நான்கைந்து வருடங்களாக பள்ளி மற்றும் கல்லூரி வகுப்பறைகளில் "விதைப்பந்து - விதைப்பந்து" என்ற வார்த்தை விழிப்புணர்வாக, விவாதமாக, விளக்க உரையாக எதிரொலித்து வருகிறது. சில நேரங்களில் அது கோஷமாகவும் எதிரொலிக்கிறது. "விதைப்பந்து விவகாரத்தை நான் தேர்ந்தெடுத்த போது இருந்த வேகம் இப்போது பல மடங்காக அதிகரித்திருக்கிறது. மாணவ மாணவியர் பெரிய ஆர்வம் காட்டுகின்றனர். பாட வகுப்புகளில் பலருக்கு செவி மடல்கள் திறப்பதில்லை. ஆர்வமான விஷயத்தை ஆர்வமாக விளக்கினால் தான் இதயக் கதவுகளும் திறக்கும்.
திருமாறன் என்ற மரமனிதர் நம் பள்ளிக்கு வந்திருக்கிறார் என்றவுடன் விழிகள் விரிகின்றன. கவனிக்கும் திறன் பலமடங்காகிறது. மசாலா, காரம், இனிப்பு, மணம் என இடம்பார்த்து தூக்கலாக விதைப்பந்துகள் பற்றி திருமாறன் பேசிப் புரிய வைக்கிறார்.
குழந்தைகளையும், கற்கின்ற மாணவ மாணவியரையும் நான் நம்பி களமிறங்கியது மட்டும் தான் நாள் வைத்த முதல் அடி. இப்போது "விதைப்பந்து" என்ற தற்கால நடவடிக்கை என்னை எங்கோ இழுத்துப் போய்க்கொண்டிருக்கிறது என்கிறார் திருமாறன். "எல்லோருக்குமானது தானே இந்த ஆக்ஸிஜன்" என கேட்டு இளைஞர்களை இது பற்றி சிந்திக்க வைப்பது மட்டுமின்றி களிமண், மரவிதைகள் என களமிறங்க வைக்கிறார்.
தமிழ்நாட்டில் தென்காசி மாவட்டம், மகாகவி பாரதி நடமாடிய கடையம் அருகிலுள்ள வெங்கடாம்பட்டி கிராமத்தில் வாழ்ந்து வருகிறார்.
"முடிந்தால் நட்டுவை - முடியாவிட்டால் விட்டுவை", "விதைப்பந்து முளைத்தால் மரம், முளைக்காவிட்டால் மண்ணுக்கு உரம்", "தலைக்குப் பத்து விதைப்பந்து", "பூமியின் காய்ச்சல் தீர விதைப்பந்தே விமோசனம்" - இப்படி பல சொல்லடைகள், சுலோகங்களுடன் மரங்களின் எண்ணிக்கை அதிகரிக்க பாடுபட்டு வருகிறார். ஒரு விதைப்பந்தில் ஐந்து மர விதைகளை வைக்கச் சொல்லும் இந்த பசுமைப் பங்காளனின் தொலை நோக்கப் பார்வை தீர்க்கமானது.
பல பேர் ஐ.நா சபையில் பேசிவிட்டோம் எனக் கூறுவதுண்டு; ஆனால் திருமாறன் அனுதினமும் மாணவர் சபையில் பேசிப் புரிய வைக்கிறார். அட உள்ளூரில் மரம் வளர்ப்பதற்கு ஐக்கிய நாடுகள் சபைக்கு ஏன் போக வேண்டும்?! உள்ளூர் பள்ளிகளுக்கு போனால் தான் காரியம் நடக்கும் என்ற அபார நம்பிக்கை இவருக்கு. வெறுதா பேச்சுகளும், விருதுப் பேச்சுகளும் விதைப்பந்து பிரகாசரகர் காதில் விழுவதில்லை. நிறைய நேரம், நிறைய சக்தி, ஏகப்பட்ட எரிபொருள், கணக்கற்ற பணச்செலவு, களைப்பில்லா பயணங்கள் இப்படி எல்லாமே பள்ளி மாணவர் முகம் பார்த்தவுடன் மறந்து போகின்றன என்கிறார் இந்த நூற்றாண்டின் பிராணவாயு உற்பத்தியாளர்.
சூப்பர் ஸ்டாரின் சுறுசுறுப்பு, கலாமின் அர்ப்பணிப்பு, மகாத்மாவின் பிடிவாதம் என இளைய தலைமுறை பயணித்தால் எதுவும் சாத்தியமே. உலக நாடுகள் உய்வு பெற "விதைப்பந்து வீச்சு" எனும் துருப்புச்சீட்டை நாடும் காலம் மிக அருகாமையில் என்பது மட்டும் புரிகிறது.

