தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் அருகிலுள்ள தட்டார்மடத்தைச் சேர்ந்தவர் லீலா புஷ்பம். இவரது வீட்டில் கடந்த 2024-ம் ஆண்டு 25 கிராம் தங்கச் சங்கிலி மற்றும் ரொக்கம் ரூ.1,80,000 திருடப்பட்டது. இதுகுறித்த புகாரின் பேரில் தட்டார்மடம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
இதில் அந்த வீட்டில் திருடிய சாத்தான்குளம் அருகிலுள்ள பண்டார புரத்தைச் சேர்ந்த ஜெயக்குமார் என்பவரைப் போலீசார் கைது செய்தனர். அவர் மீது சாத்தான்குளம் நீதிமன்றத்தில் வழக்கு நடந்து வந்தது.
வழக்கு விசாரணை முடிந்து நேற்று நீதிபதி தேவி ரக்ஷா தீர்ப்பு கூறினார். இதில் குற்றம் சாட்டப்பட்ட ஜெயக்குமாருக்கு ஒரு ஆண்டு சிறை தண்டனை விதித்தார். அவர் ஏற்கனவே மற்றொரு திருட்டு வழக்கில் சிறையில் இருப்பதால், தண்டனையை ஏக காலத்தில் அனுபவிக்குமாறு நீதிபதி உத்தரவிட்டார்.

