தூத்துக்குடி மன்னார் வளைகுடா கடல்உயிரின தேசிய பூங்கா வனத்துறை சார்பில் தொடரப்பட்ட வழக்குகளில், தொடர்ந்து விசாரணைக்கு ஆஜராகாமல் தலைமறைவாக உள்ள 5 பேர் தேடப்படும் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டுள்ளனர்

தூத்துக்குடி மன்னார் வளைகுடா கடல்உயிரின தேசிய பூங்கா வனத்துறை சார்பில் தொடரப்பட்ட வழக்குகளில் தொடர்புடையவர்கள் சம்மந்தப்பட்ட விசாரணைகளுக்குத் தொடர்ந்து ஆஜராகாமல் இருந்தனர்.

அதன்படி, திருச்செந்தூர் சுப்பிரமணிய புரத்தைச் சேர்ந்த ஆறுமுகபாண்டியன் மகன் முருகேசன், திருச்செந்தூர் நாடார் தெருவைச் சேர்ந்த ரத்தினசாமி மகன் தனசேகர், மீனவர் காலனியைச் சேர்ந்த சேவியர் மகன் கென்னடி, தூத்துக்குடி காதர் மீரான் நகரைச் சேர்ந்த மூக்கையா மகன் முத்து்க்குட்டி மற்றும் திரேஸ்புரத்தைச் சேர்ந்த கருப்பசாமி மகன் செந்தூர்பாண்டி ஆகிய 5 பேரும் தூத்துக்குடி 2-வது ஜே.டி.சியல் மாஜிஸ்திரேட் கோர்ட்டில் இதுவரை விசாரணைக்கு ஆஜராகவில்லை.

இதனால் அவர்களுக்கு ஜாமீன் அளித்த ஜாமீன்தாரர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து பலமுறை சம்மன் அனுப்பியும் நீதிமன்ற விசாரணைக்கு ஆஜராகாத இந்த 5 பேரும் கடந்த 25.06.2026 முதல் தலைமறைவு குற்றவாளியாக அறிவிக்கப்பட்டுள்ளனர். இதற்கான உத்தரவை 2-வது ஜே.எம். நீதிமன்ற மாஜிஸ்திரேட் பிறப்பித்துள்ளார்.