வங்கக்கடலில் புதிய காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவாகியுள்ளது. இது வரும் 26-ம் தேதி புயலாக வலுப்பெற்று வடக்கு ஆந்திரா - தெற்கு ஒடிசா இடையே கரையைக் கடக்கக்கூடும் எனச் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதன் தாக்கம் காரணமாகத் தமிழகத்தில் பல மாவட்டங்களில் கனமழை முதல் அதிமிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
மத்திய கிழக்கு மற்றும் அதனை ஒட்டிய தென் கிழக்கு வங்கக்கடல் பகுதியில் புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகியுள்ளது. இது இன்று (அக். 24) காற்றழுத்த தாழ்வு மண்டலமாகவும், நாளையும் (அக். 25) ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாகவும் வலுப்பெற்று, அக்டோபர் 26-ல் புயலாக உருவெடுக்கும். அதற்கடுத்த இரண்டு நாட்களில் மேலும் வலுவடைந்து வடமேற்கு திசையில் நகர்ந்து வடக்கு ஆந்திரா, தெற்கு ஒடிசா பகுதியில் கரையைக் கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
புயல் மற்றும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாகத் திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் அதிமிக கனமழை பெய்யக்கூடும் என்பதால் 'ரெட் அலர்ட்' எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கன முதல் மிக கனமழை: கோவை, நீலகிரி மற்றும் தேனி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய கன முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
தூத்துக்குடி, தென்காசி, மதுரை, திண்டுக்கல், ஈரோடு, சேலம், சென்னை, செங்கல்பட்டு உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய கனமழையும், பிற பகுதிகளில் மிதமான மழையும் பெய்யக்கூடும்.
தென் தமிழகக் கடலோரப் பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளிக் காற்று மணிக்கு 35 முதல் 45 கி.மீ. வேகத்திலும், இடையிடையே 55 கி.மீ. வேகத்திலும் வீசக்கூடும் என்பதால் இப்பகுதிகளுக்கு மீனவர்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

