தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில் இன்று (21.10.2026), வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை தொடர்பாக அனைத்து துறை அலுவலர்கள் மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து மாவட்ட ஆட்சியர் விஷு மகாஜன் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
வடகிழக்கு பருவமழையையொட்டி முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வெள்ளப் பாதிக்கப்படும் அனைத்து பகுதிகளில் உள்ள வெள்ள நிவாரண முகாம்கள் சீரமைத்திடவும், போதுமான மணல் மூட்டைகள், சுகாதாரத் துறையின் மூலம் மருந்துவ உபகரணங்கள், உணவுப்பொருட்கள் போதுமான அளவு வைத்திருக்கவும், மின்மோட்டார்கள் ஆகியவை தயார் நிலையில் இருக்க வேண்டும்.
மேலும், வெள்ளநீர் சூழ்ந்துள்ள பகுதியில் உள்ள வெள்ள நீரை மின்மோட்டார்களை கொண்டு உடனுக்குடன் அகற்றிட வேண்டும். ஊரக வளர்ச்சித்துறை மற்றும் பொதுப்பணித்துறைக்கு சொந்தமான குளங்களின் கரைகள், மதகுகள் மற்றும் நீர்வழித் தடங்களை சீரமைத்திட வேண்டும். சாலைகளில் உடைந்து விழும் மரங்களை கருவிகளை வைத்து உடனுக்குடன் அகற்றுவதற்கான பணிகள் மேற்கொள்ள வேண்டும்.
வெள்ளப்பாதிப்பு ஏற்படும் போது பொதுமக்களை மீட்பதற்கான படகுகளை தயார் நிலையில் வைத்திருக்கவும், மழையினால் சேதமடைந்த மின்கம்பங்களை உடனடியாக சரிசெய்திட வேண்டும் போன்ற பல்வேறு ஆலோசனைகளை மாவட்ட ஆட்சியர் விஷு மகாஜன் அலுவலர்களுக்கு வழங்கினார்.
இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் மூ.குருச்சந்திரன், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் நா.சரவணன், தூத்துக்குடி மாநகராட்சி ஆணையர் சி.ப்ரியங்கா, தூத்துக்குடி சார் ஆட்சியர் விவேக் யாதவ், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) பிரபு, பேரிடர் மேலாண்மைத்துறை வட்டாட்சியர் பிரபாகர் மற்றும் துறைச் சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

