கோவில்பட்டியில் தொழில் அதிபரிடம் ரூ.1.77 கோடி மோசடி செய்யப்பட்டதாக அளிக்கப்பட்ட புகாரின் பேரில் தனியார் நிறுவன உரிமையாளரைப் போலீசார் தேடி வருகின்றனர்.

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் சிந்து அகர்வால் (41). இவர் எண்ணெய் பேரல்கள் மொத்தமாக விற்பனை செய்யும் தொழில் செய்து வருகிறார். இவர் மும்பை பாந்த்ரா பகுதியைச் சேர்ந்த துளசி சிங் ராஜ்புத் என்பவரின் நிறுவனத்திற்கு கடந்த 2019 முதல் 2023-ஆம் ஆண்டு வரை 300 மெட்ரிக் டன் எண்ணெய் பேரல்களை அனுப்பியுள்ளார். இதன் மதிப்பு ரூ.1.96 கோடியாகும்.

இதற்கு கடந்த மே மாதம் வரை துளசி சிங் ராஜ்புத் ரூ.19.29 லட்சம் வரை அனுப்பியுள்ளார். மீமுள்ள தொகையான ரூ.1.77 கோடியைத் தராமல் கால தாமதம் செய்து வந்துள்ளார். பலமுறை நேரிலும், செல்போனிலும் கேட்டும் சிந்து அகர்வாலுக்கு அவர் சரிவர பதில் அளிக்காமலும், பணம் அனுப்பாமலும் இருந்துள்ளார். இதனால்தான் மோசடி செய்யப்பட்டதாகத் தூத்துக்குடி மாவட்ட குற்றப்பிரிவு போலீசாரிடம் சிந்து அகர்வால் புகார் அளித்தார். இதன்பேரில் போலீசார் துளசி சிங் ராஜ்புத் மீது மோசடி வழக்குப்பதிவு செய்து அவரை தேடி வருகின்றனர்.