தூத்துக்குடி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் TNPSC, TNUSRB, SSC போன்ற போட்டித்தேர்வுகளுக்கு நடைபெறவுள்ள கட்டணமில்லா பயிற்சி வகுப்புகளுக்குப் பயிற்றுநர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
தூத்துக்குடி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் டிஎன்பிஎஸ்சி (TNPSC), டிஎன்யுஎஸ்ஆர்பி (TNUSRB), எஸ்சிஎஸ்சி (SSC), ரயில்வே, வங்கித் தேர்வு உள்ளிட்ட பல்வேறு போட்டித்தேர்வுகளுக்குச் ஸ்மார்ட் போர்ட் (Smart Board) பயன்படுத்தி கட்டணமில்லா பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. இப்பயிற்சி வகுப்புகளுக்கு வகுப்பெடுக்க விருப்பமுள்ள தகுதியான பயிற்றுநர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
இப்பயிற்சி வகுப்புகளில் வகுப்பெடுக்க விரும்பும் பயிற்றுநர்கள் கண்டிப்பாக பவர்பாயிண்ட் (PPT) பயன்படுத்தி மாணவர்களுக்கு வகுப்பெடுக்க வேண்டும். மாணவர்களுக்கு மதிப்பீட்டு வினாக்கள் மற்றும் மாதிரி தேர்வு வினாக்களைத் தயாரித்து வேர்ட் ஆவணங்களாக (Word Document) வழங்க வேண்டும்.
இப்பயிற்சி வகுப்புகளுக்காகத் தேர்ந்தெடுக்கப்படும் பயிற்றுநர்களுக்கு அரசு விதிகளுக்குட்பட்டு மணி ஒன்றுக்கு ரூ.800 மதிப்பூதியம் வழங்கப்படும். இப்பணி முற்றிலும் தற்காலிகமானது ஆகும்.
இப்பயிற்சி வகுப்புகளில் வகுப்பெடுக்க விருப்பம் உள்ள பயிற்றுநர்கள் தங்களது கல்வித்தகுதி, கற்பிக்க விருப்பமுள்ள பாடப்பிரிவு, கல்வி நிறுவனங்கள் மற்றும் போட்டித்தேர்வுகளுக்கு வகுப்பெடுத்த முன்அனுபவம் ஆகியவற்றை குறிப்பிட்டுத் தங்களின் சுயவிவரப் படிவத்தை (Resume) 27.10.2026க்குள் vgthoothukudi1@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்புமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
நேர்முகத்தேர்வுக்கு வரும்போது போட்டித்தேர்வு தொடர்பாகத் தாங்கள் தயார் செய்த பாடக்குறிப்பு, மாதிரி வினா மற்றும் வகுப்பெடுக்க விரும்பும் பாடத்தின் PPT ஆகியவற்றை உடன் எடுத்து வருமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. நேர்முகத் தேர்வுக்கான தேதி பின்னர் தொலைபேசி வாயிலாகத் தெரிவிக்கப்படும். கூடுதல் தகவலுக்கு 0461-2003251 என்ற எண்ணைத் தொடர்பு கொள்ளலாம் என மாவட்ட ஆட்சியர் விஷு மகாஜன் தெரிவித்துள்ளார்.

