தூத்துக்குடியில் நகைக்கடை மேலாளரிடம் ரூ.10.50 கோடி மதிப்பிலான தங்கக் கட்டிகளைப் பெற்று மோசடி செய்ததாக மாவட்ட குற்றப்பிரிவு போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
தூத்துக்குடியைச் சேர்ந்த தனியார் நகைக்கடை மேலாளர் சிவபிரகாஷ் (23). இவர் கடந்த ஆகஸ்ட் 16 மற்றும் 17-ஆம் தேதிகளில், மேலூர் பகுதியைச் சேர்ந்த தனவாடே சச்சின் (42) என்பவரிடம் 7,944.680 கிராம் தங்கக் கட்டிகளைச் சுத்திகரித்து 24 காரட் தங்கமாக மாற்றுவதற்காக வழங்கியுள்ளார்.
ஆனால், வாங்கிய தங்கக் கட்டிகளைத் திருப்பி வழங்காமல், பெங்களூருவைச் சேர்ந்த பிரசாத் சவானிடம் ரூ.9 கோடிக்கு அவற்றைத் தனவாடே சச்சின் விற்பனை செய்ததாகக் கூறப்படுகிறது. பின்னர் அந்தத் தங்கக் கட்டிகளை வருமான வரித்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர். இதுகுறித்து சிவபிரகாஷ் அளித்த புகாரின்பேரில், தனவாடே சச்சின் மீது வழக்குப்பதிவு செய்துள்ள மாவட்ட குற்றப்பிரிவு போலீஸார் அவரைத் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.

