பிரசித்தி பெற்ற குலசை முத்தாரம்மன் கோவில் தசரா திருவிழாவை முன்னிட்டு, கடந்த 11 நாட்களாக விரதம் இருந்த பக்தர்கள் நேற்று தங்களது விரதத்தை நிறைவு செய்தனர். இதனை முன்னிட்டு, தூத்துக்குடி மாவட்டம் முழுவதும் மதுபானக் கடைகளில் மதுபானப் பிரியர்கள் அதிக அளவில் குவிந்தனர்.

இதனால் கடைகளில் சட்டம்-ஒழுங்குப் பிரச்சினைகள் மற்றும் தகராறுகள் ஏற்படுவதைத் தவிர்க்கும் வகையில், மாவட்ட காவல் கண்காணிப்பாளரின் பரிந்துரையின்பேரில், மாவட்ட ஆட்சியரின் உத்தரவின்படி நேற்று இரவு தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள மதுபானக் கடைகள் இரவு 8:00 மணிக்கே மூடப்பட்டன. மேலும், அனைத்துக் கடைகளின் முன்பும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டதால், மது வாங்க முடியாமல் தவித்த சில பிரியர்கள் கள்ளச்சந்தையை நாடியுள்ளனர்.

தூத்துக்குடி சிவந்தாகுளம் 5-வது தெருவில் உள்ள டாஸ்மார்க் கடைக்கு அருகில் உள்ள அறையில் கள்ளச்சந்தையில் விற்பனைக்காகப் பதுக்கி வைக்கப்பட்டிருந்த மதுபாட்டில்கள் குறித்துத் தகவல் பெறப்பட்டது. தென்பாகம் காவல் நிலைய பயிற்சி உதவி ஆய்வாளர் சிவராஜா தலைமையிலான போலீசார் அதிரடி சோதனை நடத்தி 78 மதுபாட்டில்கள் மதுபாட்டில்களைப் பறிமுதல் செய்து, பார் உரிமையாளரிடம் கண்ணன் (55) என்பவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும், தென்பாகம் காவல் நிலைய உதவி ஆய்வாளர் சுப்புராஜ் தலைமையிலான போலீசார் தூத்துக்குடி - திருச்செந்தூர் ரோடு அமுதா நகரில் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது சந்தேகத்திற்கிடமான முறையில் நின்று கொண்டிருந்த நபரைப் பிடித்து விசாரித்ததில், அவரிடம் 23 மதுபான பாட்டில்கள் இருப்பது கண்டறியப்பட்டது. விசாரணையில் அவர் அமுதா நகர் 2-வது தெருவைச் சேர்ந்த நாகராஜ் மகன் சுடலைமணி (24) என்பது தெரியவந்தது. போலீசார் அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

குலசையில்...

குலசை காவல் நிலைய உதவி ஆய்வாளர் முகேஷ் அரவிந்த் தலைமையிலான போலீசார் மேற்கொண்ட சோதனையில், கள்ளச்சந்தையில் மது விற்ற புகாரின்பேரில் உத்திரமாடன் குடியிருப்பு கீழத் தெருவைச் சேர்ந்த செந்தூர் பாண்டி என்பவரது மகன் சிவமுருகன் (33) என்பவரைப் பிடித்துக் காவல் நிலையத்தில் விசாரித்து வருகின்றனர். அவரிடமிருந்து 84 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.