பீகார் மாநிலம் பாகல்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த சுதாம் மண்டல் மகன் அரவிந்த் குமார் மண்டல் (30). இவர் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு பீகாரில் இருந்து தூத்துக்குடிக்கு வந்து குடோனில் வேலை செய்து வந்தார். தற்போது தூத்துக்குடி மாப்பிள்ளையூரணி கே.வி.கே. சாமி நகரில் தங்கி, ஒப்பந்த அடிப்படையில் தொழிலாளர்களை வேலைக்கு அழைத்துச் செல்லும் தொழில் செய்து வந்தார்.
நேற்று காலை அரவிந்த் குமார் மண்டல் வழக்கம் போல் வேலைக்குச் செல்வதற்காகத் தனது இருசக்கர வாகனத்தில் சென்றுகொண்டிருந்தார். சங்கரப்பேரி விலக்கு அருகே வந்தபோது, எதிர்பாராத விதமாக சாலையில் குறுக்கே வந்த மாடு மீது இருசக்கர வாகனம் மோதி விபத்துக்குள்ளானது.
இதில் பலத்த காயமடைந்த அவரை மீட்டுத் தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். அங்கு தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த அவர், நேற்றிரவு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்துச் சிப்காட் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

