இந்தியா முழுவதும் பல்வேறு பாதுகாப்புப் பணிகளின்போது நாட்டையும் மக்களையும் காக்கத் தன்னுயிர் நீத்த அனைத்து காவலர்களின் தியாகத்தைப் போற்றும் வகையிலும், அவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையிலும் ஆண்டுதோறும் அக்டோபர் 21-ஆம் தேதி 'காவலர் வீர வணக்க நாள்' அனுசரிக்கப்பட்டு வருகிறது.
அதன்படி, இன்று (21.10.2026) தூத்துக்குடி மாவட்டம், தெற்கு காவல் நிலையத்தில் அமைந்துள்ள காவலர் நினைவுச் சின்னத்தில் வீர வணக்க நாள் நிகழ்வு அனுசரிக்கப்பட்டது.
இந்நிகழ்வில் தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ரா. சிவ பிரசாத் கலந்துகொண்டு, காவல் நினைவுச் சின்னத்தில் மலர்வளையம் வைத்து நாட்டுக்காக உயிர் துறந்த காவலர்களுக்கு வீர வணக்கம் செலுத்தி அஞ்சலி தெரிவித்தார்.
அவரைத் தொடர்ந்து மாவட்டக் காவல் துறை உயர் அதிகாரிகளும், காவல் ஆய்வாளர்கள் மற்றும் பிற காவல்துறையினரும் நினைவுச் சின்னத்தில் மலர்களைத் தூவி மரியாதை செலுத்தினர். நாட்டின் பாதுகாப்புக்காகத் தங்களது இன்னுயிரை நீத்த காவலர்களின் தியாகம் இந்நிகழ்வில் நினைவுபடுத்தப்பட்டது.

