மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் பீடத்தில் தைப்பூச இடிமுடி பெருவிழாவை முன்னிட்டு தூத்துக்குடியில் இருந்து சிறப்பு ரயில்களை இயக்க வேண்டும் என்று மத்திய இரயில்வே அமைச்சருக்கு ஆதிபராசக்தி ஆன்மிக இயக்கம் சார்பில் தூத்துக்குடி மாவட்ட தலைமை ஒருங்கிணைப்பாளர் சக்தி ஆர்.முருகன் கோரிக்கை விடுத்துள்ளார்.
மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் பீடத்தில் தைப்பூச இடிமுடி பெருவிழா வருகிற டிச.4ஆம் தேதி தொடங்கி 2027 ஜனவரி 22ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இந்த இருமுடி விழாவில் தென் மாவட்டங்களில் இருந்தும் குறிப்பாக தூத்துக்குடி மாவட்டத்தின் பல்வேறு ஊர்களில் இருந்தும் சக்திமாலை அணிந்து பக்தர்கள் கலந்து கொள்கின்றனர்.
தூத்துக்குடி - சென்னை இடையே தற்போது ஒரே ஒரு ரயில் மட்டுமே இயக்கப்படுகிறது. தூத்துக்குடி - சென்னை முத்துநகர் எக்ஸ்பிரஸ் ரயிலில் முன்பதிவு நிரம்பி வழிகிறது. காத்திருப்போர் பட்டியல் அதிகரித்துக் காெண்டே வருகிறது. இதனால் முதியவர்கள், பெண்கள் உட்பட பயணிகள் அனைவரும் கூட்ட நெரிசலில் சிக்கி அவதிக்குள்ளாகின்றனர்.
மேலும், தூத்துக்குடியில் இருந்து சென்னைக்கு இயக்கப்பட்டு வந்த குருவாயூர் லிங்க் எக்ஸ்பிரஸ் தற்போது நிறுத்தப்பட்டுள்ளது. இந்த ரயிலை மேல்மருவத்தூர் செல்லும் தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த கிராம மக்கள் பயன்படுத்தி வந்தனர். தற்போது அந்த ரயில் நிறுத்தப்பட்டுள்ளதால் மக்கள் அதிக கட்டணம் செலுத்தி பேருந்துகளில் செல்ல வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
எனவே ஆயிரக் கணக்கான பக்தர்கள் பயனடையும் வகையில் தூத்துக்குடியில் இருந்து மேல்மருவத்தூருக்கு சிறப்பு ரயில்களை இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மீண்டும் குருவாயூர் எக்ஸ்பிரஸ் ரயிலை இயக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி ஆன்மிக இயக்கம் சார்பில் தூத்துக்குடி மாவட்ட தலைமை ஒருங்கிணைப்பாளர் சக்தி ஆர்.முருகன் கோரிக்கை விடுத்துள்ளார்.

