தூத்துக்குடியில் அமைந்துள்ள 177 ஆண்டுகள் பழமையான புகழ்பெற்ற சின்னக் கோயில் எனப்படும் திரு இருதயங்களின் மேற்றாசன பேராலயம் அமைந்துள்ளது. இந்நிலையில், நேற்று அப்பகுதியில் பெய்த பலத்த கனமழையின் போது திடீரென இடி மின்னல் தாக்கியுள்ளது.
பேராலயத்தின் உயர்ந்த கோபுரத்தின் உச்சியில் அமைக்கப்பட்டிருந்த இயேசுவின் சுரூபம் மீது இடி தாக்கியது. இதில் சிலையின் கை பகுதி சேதமடைந்தது. இடி தாக்கிய வேகத்தில் சிலிண்டர் போன்ற சிதறல்கள் கீழே விழுந்தாலும், அதிர்ஷ்டவசமாகச் சம்பவ நேரத்தில் கீழே பொதுமக்கள் யாரும் இல்லாததால் பெரும் உயிர் சேதம் தவிர்க்கப்பட்டது.
இச்சம்பவம் குறித்துத் தேவாலய நிர்வாகத்திற்கும் அதிகாரிகளுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து, சேதமடைந்த சிலையைச் சீரமைக்கும் பணிகளை மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டது. அதன் ஒரு பகுதியாக, இன்று ராட்சத கிரேன் வரவழைக்கப்பட்டு, கோபுர உச்சியிலிருந்து இயேசுவின் திரு இருதயச் சுரூபம் பாதுகாப்பாகக் கீழே இறக்கப்பட்டது. இச்சம்பவம் அப்பகுதி கிறிஸ்தவ மக்களிடையே பெரும் சோகத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

