தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக வடகிழக்கு பருவமழை தீவிரமாகப் பெய்து வருகிறது. இந்நிலையில், இன்று மதியம் தூத்துக்குடி மாவட்டம் முழுவதும் பயங்கர இடி மற்றும் மின்னலுடன் கூடிய பலத்த மழை பெய்தது. இதனால் சாலைகளில் மழைநீர் வெள்ளம் போல் பெருக்கெடுத்து ஓடியது.
தூத்துக்குடி கோரம்பள்ளம் பெரியநாயகிபுரம் நடுத்தெருவைச் சேர்ந்தவர் மாரிமுத்து மகன் மதன்குமார் (24). இவர் தனது வீட்டில் ஆடுகளை வளர்த்து வருகிறார். இன்று பெய்த மழையின்போது இவரது ஆடுகள் வீடு அருகே உள்ள சாலையில் மேய்ந்து கொண்டிருந்தன.
மழையில் சிக்கிய ஆடுகளை வீட்டுக்குள் பாதுகாப்பாக அழைத்து வருவதற்காக மதன்குமார் அவர்களைத் தேடிச் சென்றுள்ளார். அப்போது எதிர்பாராதவிதமாக அங்கு ஏற்பட்ட பயங்கர இடி மின்னல் மதன்குமார் மீது தாக்கியது. இதில் அவர் அதே இடத்தில் உடல் கருகிப் பரிதாபமாக உயிரிழந்தார்.
இச்சம்பவம் குறித்துத் தகவல் அறிந்த புதுக்கோட்டை காவல் நிலைய இன்ஸ்பெக்டர் ராமகிருஷ்ணன் மற்றும் போலீசார் உடனடியாகச் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். பின்னர் பலியான மதன்குமாரின் உடலைக் கைப்பற்றிப் பிரேதப் பரிசோதனைக்காகத் தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இடி மின்னல் தாக்கி இளம் வாலிபர் உயிரிழந்த இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. இது குறித்துப் புதுக்கோட்டை போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

