தூத்துக்குடி அண்ணாநகர் 3-வது தெருவைச் சேர்ந்தவர் லிங்கராஜ். இவருடைய மகன் பொன்ராஜ் என்ற ராசுக்குட்டி (28). இவர் நேற்று முன்தினம் அண்ணாநகர் 6-வது தெருவில் நடமாடிய பொதுமக்கள் மத்தியில் அரிவாளுடன் தகராறு செய்துகொண்டு ரகளையில் ஈடுபட்டுள்ளார்.

இது குறித்துத் தகவல் அறிந்த தென்பாகம் காவல் நிலைய போலீசார் உடனடியாகச் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அவரைப் பிடிக்க முயன்றனர். அப்போது அவர் போலீசாரிடமும் தகராறில் ஈடுபட்டுள்ளார். இதையடுத்து போலீசார் அவரை மடக்கிப் பிடித்தனர். அவரிடமிருந்த அரிவாளும் பறிமுதல் செய்யப்பட்டது.

இது குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து அவரைக் கைது செய்தனர். கைதான பொன்ராஜ் மீது தாளமுத்துநகர், சிப்காட், புதுக்கோட்டை, தென்பாகம் உள்ளிட்ட பல்வேறு காவல் நிலையங்களில் மொத்தம் 35 வழக்குகள் நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.