தமிழ்நாடு மின்சார வாரிய தொழிற்சங்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு சார்பில், தூத்துக்குடி அனல்மின்நிலையம் முன்பு நேற்று கவனஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இப்போராட்டத்திற்குத் தமிழ்நாடு மின்வாரிய தொழிற்சங்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு நிர்வாகி அப்பாத்துரை தலைமை தாங்கினார்.

இதில் தூத்துக்குடி அனல்மின்நிலையம் மற்றும் புதிதாகக் கட்டப்பட்டுள்ள உடன்குடி அனல்மின்நிலையத்தைத் தனியார் வசம் ஒப்படைக்கும் முடிவைக் உடனடியாகக் கைவிட வேண்டும். மின்பாதைகள் மற்றும் மின் உற்பத்தியைத் தனியார்மயமாக்கும் திட்டங்களை ரத்து செய்ய வேண்டும். தமிழ்நாடு மின்சார வாரியத்தில் காலியாக உள்ள பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது.

தங்களது கோரிக்கைகள் நிறைவேற்றப்படாவிட்டால், வரும் நவம்பர் 2-ஆம் தேதி முதல் மின்சார வாரிய ஊழியர்கள் அனைவரும் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட உள்ளதாகத் தெரிவித்துள்ளனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் அனல்மின்நிலைய ஊழியர்கள் திரளாகக் கலந்துகொண்டனர்.