தூத்துக்குடியில் ஆண்டுதோறும் புரட்டாசி மாதம் கொண்டாடப்படும் நவராத்திரி திருவிழா கடந்த 10-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி, 20-ம் தேதி சூரசம்ஹாரத்துடன் நிறைவடைந்தது. அதனைத் தொடர்ந்து 21-ம் தேதி அனைத்துக் கோவில்களிலும் அலங்கரிக்கப்பட்ட சப்பர வீதி உலா சிறப்பாக நடைபெற்றது.
இதனை முன்னிட்டு, தூத்துக்குடி கிப்சன் புரம் இளைஞர் குழு சார்பாக 57-வது ஆண்டு தசரா சப்பர பேரணி தபசு மண்டபம் முன்பு நடைபெற்றது. விழாவில், தூத்துக்குடி வடபாகம் சந்தன மாரியம்மன் கோவில், மட்டக்கடை உச்சினிமாகாளி அம்மன் கோவில், வடக்கு வீதி முத்தாரம்மன் கோவில், மேலூர் பத்ரகாளி அம்மன் கோவில் ஆகிய திருக்கோவில்களின் உற்சவ சப்பரங்களுக்கு தாரை தப்பட்டை முழங்க சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டு, சிறப்பு அபிஷேகம் மற்றும் பூஜைகள் நடைபெற்றன.
பூஜைகளைத் தொடர்ந்து பக்தர்களுக்குப் பிரம்மாண்ட அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு தசரா குழு தலைவர் ராமராஜன் தலைமை தாங்கினார். தூத்துக்குடி ஸ்ரீ சுப்பிரமணியசாமி மகமை பரிபாலன சங்க செயலாளர் எம். எஸ். எஸ். கந்தப்பன் கலந்துகொண்டு அன்னதானத்தைத் தொடங்கி வைத்தார்.

இந்நிகழ்வில் விவேகம் டிராவல்ஸ் அதிபர் விவேகம் ரமேஷ், சிவன் கோவில் அறங்காவலர் குழு தலைவர் கந்தசாமி, பெருமாள் கோவில் அறங்காவலர் குழு தலைவர் செந்தில்குமார் மற்றும் தொழிலதிபர்கள் ரமேஷ், எம். வெங்கடேஷ், டி. எம். சதாசிவம், செந்தில் முருகன், சிவசாரியார், எம். குமார் பட்டர், ஆர். கணபதி மற்றும் கிப்சன் புரம் இளைஞர் குழுவினர் திரளாகக் கலந்துகொண்டனர்.

