தூத்துக்குடி வ.உ.சிதம்பரனார் துறைமுகத்தில் ரூ.18,400 கோடி மதிப்பிலான கடல்சார் உள்கட்டமைப்பு முதலீட்டுத் திட்டங்களை மத்திய அரசு தீவிரமாக முன்னெடுத்து வருகிறது.

தூத்துக்குடி வ.உ.சிதம்பரனார் துறைமுகத்தில் ரூ.18,400 கோடி மதிப்பிலான கடல்சார் உள்கட்டமைப்பு முதலீட்டுத் திட்டங்களை இந்திய அரசு முன்னெடுத்து வருகிறது. இதன் மூலம் நாட்டின் சர்வதேச வர்த்தகம், தொழில் வளர்ச்சி மற்றும் பசுமை எரிசக்திப் பொருளாதாரத்தில் தென்தமிழகத்தின் பங்களிப்பு மேலும் வலுப்பெறுகிறது.

கடந்த சுமார் ஆறு மாதங்களில், துறைமுகத்தில் மூன்று முக்கியத் திட்டங்கள் முன்னெடுத்துச் செல்லப்பட்டுள்ளன. ரூ.17,167 கோடி மதிப்பிலான வெளித்துறைமுக மேம்பாட்டுத் திட்டம், ரூ.520 கோடி மதிப்பிலான 7-ஆம் எண் தளத்தில் அமைக்கப்படும் சரக்குப் பெட்டக முனையம் மற்றும் முன்மொழியப்பட்ட ரூ.750 கோடி மதிப்பிலான கடல்சார் காற்றாலை முனையம் ஆகிய மூன்று திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

அரசு முதலீடு மற்றும் பொது-தனியார் கூட்டாண்மை (PPP) முறைகள் மூலம் முன்னெடுக்கப்படும் இத்திட்டங்கள், இப்பகுதியில் கடல்சார் உள்கட்டமைப்புத் துறையில் பெருமளவிலான முதலீடுகள் மேற்கொள்வதைக் குறிக்கின்றன.

கடந்த 2026 அக்டோபர் 11 அன்று சென்னையில் உரையாற்றிய பாரதப் பிரதமர் நரேந்திர மோடி, வ.உ.சிதம்பரனார் துறைமுகத்தை உலகத் தரம் வாய்ந்த மிகப்பெரிய சரக்குப் பெட்டகத் துறைமுகமாகவும், பசுமை எரிசக்தி மையமாகவும் மேம்படுத்துவதற்காக மத்திய அரசு சுமார் ரூ.17,000 கோடி முதலீடு செய்ய முடிவெடுத்துள்ளதைச் சுட்டிக்காட்டினார். உலகின் மிகப்பெரிய சரக்குப் பெட்டகக் கப்பல்கள் தூத்துக்குடி துறைமுகத்திற்கு வந்து செல்ல இது வழிகோலும்.

இத்திட்ட மேம்பாடுகளின் பின்னணியில், இந்திய அரசின் துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் நீர்வழிப்பாதை அமைச்சகத்தின் செயலாளர் விஜயகுமார் ஐ.ஏ.எஸ்., செவ்வாய்க்கிழமை தூத்துக்குடி வ.உ.சிதம்பரனார் துறைமுகத்திற்கு வருகை தந்து ஆய்வு மேற்கொண்டார்.

ஆய்வின்போது பசுமை ஹைட்ரஜன் முன்னோடித் திட்ட ஆலை, காற்றாலை மின் வசதிகள், முன்னோட்ட மெத்தனால் எரிபொருள் நிரப்புதல் மற்றும் கப்பல்களுக்கு எரிபொருள் வழங்குவதற்கான உள்கட்டமைப்பு வசதிகளைப் பார்வையிட்டார். மேலும், கப்பல்களுக்குக் கரையிலிருந்து மின்சாரம் வழங்கும் வசதிகள், கூடுதல் கப்பல் நிறுத்தும் வசதிகளையும் தொடங்கி வைத்தார். பசுமை முன்முயற்சியாக, தூத்துக்குடி சர்வதேச சரக்குப் பெட்டக முனையத்தின் (TICT) பயன்பாட்டிற்காக 13 மின்சார லாரிகளையும் அவர் கொடியசைத்துத் தொடங்கி வைத்தார்.

செயலாளர் அவர்கள், துறைமுகத்தின் மெய்நிகர் மாதிரிச் செயலி (Digital Twin) மற்றும் 'PortGPT' முன்முயற்சிகள் குறித்தும் ஆய்வு செய்தார். தொடர்ந்து முனைய இயக்குநர்கள், வர்த்தகர்கள் மற்றும் கடல்சார் துறையினருடன் கலந்தாலோசித்தார். இதில் துறைமுகம் சார்ந்த தொழில்மயமாக்கல் மற்றும் முன்மொழியப்பட்டுள்ள மிகப்பெரிய புதிய கப்பல் கட்டும் தொழில் தொகுப்பு குறித்தும் விவாதிக்கப்பட்டது.

vocportinspec.jpg

சிறப்பாகச் செயல்பட்ட துறைமுக அதிகாரிகளுக்கும், 2025-26 நிதியாண்டில் சிறப்பாகச் செயல்பட்ட துறைமுக உபயோகிப்பாளர்களுக்கும் விருதுகளை வழங்கி அவர் பாராட்டினார்.

'கடல்சார் அம்ரித் கால் தொலைநோக்குத் திட்டம் 2047' (Maritime Amrit Kaal Vision 2047) இன் கீழ் மேற்கொள்ளப்படும் இத்திட்டங்கள், தென்தமிழகம் முழுவதும் உள்ள ஏற்றுமதியாளர்கள், சரக்கு போக்குவரத்து நிறுவனங்கள் மற்றும் உற்பத்தித் தொழில்களுக்குப் புதிய வாய்ப்புகளை உருவாக்கும் என வ.உ.சிதம்பரனார் துறைமுக ஆணையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.