குலசேகரன்பட்டினம் தசரா திருவிழா எதிரொலியாக தூத்துக்குடி திரேஸ்புரத்தில் மீன் வரத்து குறைவு மற்றும் வாடிக்கையாளர்கள் வருகை குறைந்ததன் காரணமாக, மீன் விலை அதிரடியாகக் குறைந்து காணப்பட்டது.
குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவில் தசரா திருவிழாவை முன்னிட்டுத் தூத்துக்குடி மாவட்டம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதியில் உள்ள மக்கள் மாலை அணிந்து விரதம் இருந்து வருகின்றனர். இதனால் திரேஸ்புரம் நாட்டுப் படகு மீன்பிடி துறைமுகத்தில் கடந்த சில வாரங்களாக மீன்களின் விலை குறைந்து வருகிறது.
எனவே பெரும்பாலான நாட்டுப் படகு மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்கச் செல்லவில்லை. ஆழ்கடலுக்கு மீன் பிடிக்கச் சென்ற குறைந்தளவு நாட்டுப் படகு மீனவர்களே நேற்று கரைக்குத் திரும்பினர். அவ்வாறு கரைக்குத் திரும்பிய மீனவர்களுக்கு, மீன்பாடு சரிவர இல்லாததால் திரேஸ்புரம் நாட்டுப் படகு மீன்பிடித் துறைமுகத்தில் மீன்களின் வரத்து குறைவாகக் காணப்பட்டது.
கடந்த வாரங்களில் கிலோ ரூ.1,200-க்கு மேல் விற்பனையான சீலா மீன் நேற்று கிலோ ரூ.800-க்கு விற்பனை ஆனது. அதேபோல் விளமீன், ஊழி, பாறை ஆகிய மீன்கள் கிலோ ரூ.300 முதல் ரூ.400 வரையும், சூப்பர்பாறை கிலோ ரூ.600 வரையும், சாலை மீன் ஒரு கூடை ரூ.700 வரையும் விற்பனை ஆனது. ஏற்றுமதி ரகம் வாய்ந்த சூரை மீன்கள் கிலோ ரூ.180 வரை விற்பனையானது.
நேற்று மீன்களை வாங்குவதற்காக பொதுமக்கள், வியாபாரிகள் பலர் வந்திருந்தனர். எனினும் வழக்கத்தை விட மக்கள் கூட்டம் குறைவாகக் காணப்பட்டது. மீன்களுக்கு நல்ல விலை கிடைக்காததால் மீனவர்கள் கவலை அடைந்தனர். மேலும் தசரா திருவிழாவிற்குப் பின்பு மீன்களுக்கு நல்ல விலை கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பில் மீனவர்கள் உள்ளனர்.

