தூத்துக்குடியில் அமைந்துள்ள புகழ்பெற்ற அன்னை ஸ்ரீ பாகம்பிரியாள் உடனுறை அருள்மிகு ஸ்ரீ சங்கரராமேஸ்வரர் திருக்கோவிலில் ஆண்டுதோறும் சிறப்பாகக் கொண்டாடப்படும் ஐப்பசி திருக்கல்யாணத் திருவிழா இன்று காலை கொடியேற்றத்துடன் கோலாகலமாகத் தொடங்கியது.
திருவிழாவை முன்னிட்டு இன்று அதிகாலை 4 மணிக்குக் கோவில் நடை திறக்கப்பட்டது. தொடர்ந்து காலை 7.35 மணிக்குக் கணபதி ஹோமம் மற்றும் கும்ப பூஜை நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து, காலை 9.40 மணிக்கு அன்னை ஸ்ரீ பாகம்பிரியாள் சன்னதி எதிரே உள்ள கொடிமரத்தில் கொடியேற்றம் நடைபெற்றது. பின்னர் அன்னை பாகம்பிரியாளுக்கு 21 வகையான சிறப்பு அபிஷேகங்களும், மகா தீபாராதனையும் நடத்தப்பட்டன.
பூஜைகளைத் திருக்கோவிலின் பிரதான பட்டர்கள் செல்வம், குமார் மற்றும் சண்முகம் ஆகியோர் சிறப்பாக நடத்தினர். இந்நிகழ்வில் தமிழ்நாடு மீனவர் நலன் மற்றும் மீன்வளத்துறை அமைச்சர் திரு. ஸ்ரீநாத் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தார்.
மேலும் கோவில் அலுவலர் தமிழ்ச்செல்வி, அறங்காவலர் குழுத் தலைவர் கந்தசாமி, அறங்காவலர்கள் ஆறுமுகம், ஜெயலட்சுமி, சாந்தி, உப்பள அதிபர் கே.ஏ.பி. சீனிவாசன், சுப்பிரமணிய சுவாமி மகமை பரிபாலன சங்கச் செயலாளர் எம்.எஸ்.எஸ். கந்தப்பன் பிள்ளை, மாவட்ட ஆட்சியரின் முன்னாள் நேர்முக உதவியாளர் மாரியப்பன், தமிழக வெற்றிக் கழக நிர்வாகிகள் திருச்சிற்றம்பலம், கிஷோர், கோல்டன், டைகர் சிவா, சங்கரி உட்படத் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
10 நாட்கள் நடைபெறும் இத்திருக்கல்யாணத் திருவிழாவை முன்னிட்டுத் தினமும் மாலையில் அன்னை ஸ்ரீ பாகம்பிரியாள் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி ரத வீதிகளில் உலா வரும் நிகழ்ச்சி நடைபெறவுள்ளது.
திருவிழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் வரும் நவம்பர் 3-ம் தேதி நடைபெறவுள்ளது. திருவிழாவின் சிகர நிகழ்வான அருள்மிகு சங்கரராமேஸ்வரர் - பாகம்பிரியாள் திருக்கல்யாண வைபவம் வரும் நவம்பர் 5-ம் தேதி கோலாகலமாக நடைபெறவுள்ளது. விழாவிற்கான அனைத்து ஏற்பாடுகளையும் திருக்கோவில் நிர்வாகத்தினரும் அறங்காவலர்களும் இணைந்து செய்து வருகின்றனர்.

