துாத்துக்குடி நகரின் மையப் பகுதியில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற அன்னை ஸ்ரீ பாகம்பிரியாள் உடனுறை சங்கரராமேஸ்வரர் திருக்கோவில் என்று அழைக்கப்படும் சிவன் கோவிலில் ஐப்பசி திருக்கல்யாண தேரோட்ட திருவிழா, ஒவ்வொரு ஆண்டும் விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது.
இந்த ஆண்டும், பெரிய அளவில் வழக்கம் போல், விழாவை நடத்த ஏற்பாடு செய்யப்பட்டு இன்று 26ம் தேதி கொடியேற்றத்துடன் விழா துவங்குகிறது. வரும் நவ. 3ம் தேதி தேரோட்டமும், 5ம் தேதி திருக்கல்யாண விழாவும் நடப்பதாக, பிரமாண்ட அழைப்பிதழ் அச்சடிக்கப்பட்டுள்ளது.
இந்த அழைப்பிதழில், அறங்காவலர் குழுவின் ஒப்புதல் இல்லாமல் திருத்தேரோட்ட பவனி விழா உறுப்பினர்கள் என்று, 15 பேர் அடங்கிய பெயர்கள் இடம் பெற்றிருப்பது, பக்தர்களிடையே சர்ச்சையையும், பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தவெக மத்திய மாவட்டச் செயலாளரும், மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை அமைச்சருமான ஸ்ரீநாத் கொடுத்த அழுத்தத்தின் அடிப்படையில், கோவில் நிர்வாக அதிகாரி இந்த முறைகேடான நியமனத்தை மேற்கொண்டதாகப் புகார் எழுந்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.
அறங்காவலர் குழுவின் ஒப்புதல் மற்றும் அறநிலையத்துறையின் அனுமதி இல்லாமல், கோவில் நிர்வாக அதிகாரி தன்னிச்சையாக இத்தகைய முடிவை எடுத்திருப்பது விதிமீறல் எனப் பக்தர்கள் தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்படுகிறது.
ஏற்கெனவே அண்மையில் மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் நடைபெற்ற கும்பாபிஷேகத்தின்போது நிர்வாக நடைமுறைகள் தொடர்பாக சர்ச்சைகள் எழுந்ததாகச் சுட்டிக்காட்டும் பக்தர்கள், தற்போது தூத்துக்குடி கோவிலிலும் இதுபோன்ற சர்ச்சை ஏற்பட்டுள்ளதாகக் கூறுகின்றனர்.
எனவே, இந்து சமய அறநிலையத்துறையின் அனுமதியும் அறங்காவலர் குழுவின் ஒப்புதலும் இல்லாமல் தேரோட்டக் கமிட்டி உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டதாகக் கூறப்படும் தவெகவினர் 12 பேரின் பெயர்களையும் அழைப்பிதழிலிருந்து உடனடியாக நீக்க வேண்டும் எனப் பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

