புரட்டாசி மாத ஐந்தாவது சனிக்கிழமையை முன்னிட்டு, தூத்துக்குடியில் அமைந்துள்ள புகழ்பெற்ற அருள்மிகு ஸ்ரீ வைகுண்டபதி பெருமாள் கோயிலில் சிறப்பு பூஜைகள் மற்றும் வழிபாடுகள் விமரிசையாக நடைபெற்றன.
புரட்டாசி சனிக்கிழமைகளை முன்னிட்டு பெருமாள் கோயில்களில் சிறப்பு அலங்காரங்கள் செய்யப்பட்டு வருவது வழக்கம். அதன்படி, இத்தலத்தில் சுவாமி ஸ்ரீதன்வந்திரி பெருமாள் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்குக் காட்சியளித்தார். ஆரோக்கியத்தின் அடையாளமாகக் கருதப்படும் தன்வந்திரி வடிவத்திலான இந்த அலங்காரத்தைக் காணவும், பெருமாளின் திருவருளைப் பெறவும் காலை முதலே தூத்துக்குடி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இருந்து திரளான பக்தர்கள் கோயிலில் குவிந்தனர்.
பக்தர்கள் எவ்வித சிரமமுமின்றி சுவாமி தரிசனம் செய்வதற்கான ஏற்பாடுகளைக் கோயில் நிர்வாகத்தின் சார்பில் செய்திருந்தனர். நீண்ட வரிசையில் நின்ற பக்தர்கள் கோவிந்தா, ஹரி நாமாக்களைச் சொல்லி சாமி தரிசனம் செய்துவிட்டுப் பிரசாதம் பெற்றுச் சென்றனர்.

