தூத்துக்குடி மீன்வளக் கல்லூரியில் எம்பவர் இந்தியா நுகர்வோர் கல்வி மற்றும் ஆராய்ச்சி நடுவம் சார்பில் உலக அயோடின் பற்றாக்குறை குறைபாடுகள் தடுப்பு தின விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியை கல்லூரியின் டீன் சண்முகம் தொடங்கி வைத்து விழிப்புணர்வுப் பலகையை வெளியிட, முதல் பிரதியை எம்பவர் இந்தியா செயல் இயக்குநர் ஆ.சங்கர் பெற்றுக்கொண்டார்.
நிகழ்ச்சிக்குத் தலைமை தாங்கிப் பேசிய எம்பவர் இந்தியா செயல் இயக்குநர் ஆ.சங்கர் கூறியதாவது: "கடந்த 22 ஆண்டுகளாக எம்பவர் இந்தியா சார்பில் உணவில் அயோடின் உப்பு பயன்படுத்துவதன் அவசியம் குறித்த விழிப்புணர்வைத் தமிழகம் முழுவதும் ஏற்படுத்தி வருகிறோம். இந்தியாவில் உப்பு உற்பத்தியில் முதலாவதாகக் குஜராத்தும், அதற்கு அடுத்தபடியாகத் தமிழகமும் விளங்குகிறது. மேலும், தமிழகத்தில் தூத்துக்குடி மாவட்டம் உப்பு உற்பத்தியில் முதலிடம் வகிக்கிறது" என்றார்.
அயோடின் என்பது உடலில் தைராய்டு ஹார்மோன்கள் உருவாக மிக அவசியமான நுண்ணூட்டச் சத்தாகும். அயோடின் சத்து குறைந்தால் மூளை வளர்ச்சி குறைவு, நினைவாற்றல் மங்குதல், முன் கழுத்துக் கழலை மற்றும் கர்ப்பிணிப் பெண்களுக்கு அடிக்கடி கருச்சிதைவு என பல்வேறு நோய்கள் ஏற்படும். சர்க்கரை, உப்பு, எண்ணெய் வகைகளை உணவில் குறைப்போம் என்றும், உணவு பாதுகாப்புத் துறையின் வழிகாட்டுதழ்படி அயோடின் கலந்த உப்பைப் பயன்படுத்தி நலமுடன் வாழ்வோம் என்றும் அவர் கேட்டுக் கொண்டார்.
இதனைத் தொடர்ந்து உலக அயோடின் பற்றாக்குறை குறைபாடுகள் தடுப்பு தின விழிப்புணர்வு மற்றும் அயோடின் அவசியம் குறித்து உறுதிமொழி ஏற்கப்பட்டது. முன்னதாக மீனவக் கல்லூரி நாட்டுநலப்பணித் திட்ட ஒருங்கிணைப்பாளர் சண்முகம் அனைவரையும் வரவேற்றார்; எம்பவர் இந்தியா மேலாளர் லலிதாம்பிகை நன்றி கூறினார். இந்நிகழ்ச்சியில் கல்லூரியின் மாணவ-மாணவிகள் பலர் கலந்துகொண்டனர்.

